May 28

மஞ்செஸ்டர் தாக்குதலுக்கு பராக் ஒபாமா, அங்கேலா மேர்க்கல் மற்றும் கென்டர்பர்ரி பேராயர் கண்டனம்

பிரித்தானியாவின் மஞ்செஸ்டரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் மற்றும் கென்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி (Justin Welby) ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பேர்லினில் நடத்தப்பட்ட எதிர்ப்பாளர் மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உரையாற்றிய அவர், ‘”மஞ்செஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்னை மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளாக்கியது. தாக்குதலில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கல் (Angela Merkel), “உங்கள் வேதனைகளை பகிர்ந்து கொள்ள நாம் ஒருபோதும் தயங்க மாட்டோம். அதே நேரம் உங்கள் அனைவரினதும் பாதுகாப்பிற்கு நாமும் பொறுப்பேற்பதுடன் எப்போதும் துணை நிற்போம் எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.

பிரித்தானிய மஞ்செஸ்டர் அரீனா பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 64 பேர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலை மேற்கொண்ட சல்மான் அபேடி எனும் 22 வயது மதிக்கத்தக்க இளைஞனும் இந்த தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.