May 28

தமிழ் மொழி உள்ளிட்ட 12 மொழிகளில் இசைக்கப்படவுள்ள கனேடிய தேசிய கீதம்

கனடாவின் 150வது வருட பூர்த்தியை முன்னிட்டு தமிழ் மொழி உள்ளிட்ட 12 மொழிகளில் அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.

TSO (Toronto Symphony Orchestra)  என்ற சிம்பொனி ஒக்கேஸ்ரா நிறுவனம், கனடாவின் 150ஆம் ஆண்டு நிறைவையொட்டி கனடாவில் அதிகம் பேசப்படும் 12 மொழிகளில் கனேடிய தேசிய கீதத்தை உருவாக்கியுள்ளது.

இதுவரை காலமும் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் மட்டுமே இசைக்கப்பட்டு வந்த தேசியக் கீதம், முதன்முறையாக 12 மொழிகளில் இசைக்கப்படுவதால் அனைவரும் இத்தினத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கனேடிய தேசிய கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்ச் மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயேவால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியரால் 1908ஆம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் ஆக்கத்தை கவிஞர் கந்தவனம் எழுதியுள்ளார்.

கனடாவின் 150வது வருட பூர்த்தி, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.