Jun 18

இக்னிஸ்’ மாடல் டீசல் கார்கள் விற்பனையை நிறுத்தும் மாருதி சுசுகி!

மாருதி சுசுகி நிறுவனம் டீசல் மாடல் ‘இக்னிஸ்’ கார்கள் விற்பனையை நிறுத்தி முடிவு செய்துள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக மாருதி சுசுகி இந்தியா திகழ்கிறது. இதன் டீசல் மாடல் கார்களில் ஒன்றாக ‘இக்னிஸ்’ உள்ளது. இதன் விற்பனை மந்தமான நிலையில், உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட ’இக்னிஸ்’ மாடல் டீசல் கார், தற்போது வரை 72,000 கார்கள் விற்பனையாகி உள்ளன. ஜனவரி - மே 2018 காலக்கட்டத்தில் மட்டும், மாதத்திற்கு சராசரியாக 4,500 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக மாருதி சுசுகி இந்தியாவின் செய்தித் தொடர்பாளரிடம் பேசிய போது, வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து மாருதி சுசுகி செயல்படுகிறது. அதேசமயம் அவர்களிடம் நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்று தெரிவித்தார்.

நெக்சா டீலர்ஷிப் மூலம் விற்கப்பட்ட மூன்றாவது மாடல் கார் ‘இக்னிஸ்’ ஆகும். ’இன்கிஸ்’ விற்பனை மூலம் இந்திய நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொண்டனர். 

’இக்னிஸ்’ மாடல் 1.2 லி பெட்ரோல் எஞ்சின் வாகனம் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் 1.3 லி டீசல் எஞ்சின் வாகன விற்பனை நிறுத்தப்படுகிறது. பெட்ரோல் மாடல் காரின் விலை ரூ.4.66 லட்சம் முதல் ரூ.7.04 வரை கிடைக்கிறது.