May 27

‘கோப்டிக்’ கிறிஸ்தவர்கள் படுகொலை: ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான் தாக்குதலை தொடங்கியது எகிப்து

எகிப்து நாட்டில் 28 கோப்டிக் கிறிஸ்தவர்களை சுட்டுக் கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக லிபியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ் தீவிரவாத குழுக்கள் மீது எகிப்து ராணுவம் வான் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்யா பகுதியில் ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்களின் அன்பா சாமுவேல் குருகுலம் அமைந்துள்ளது.

இந்த குருகுலத்துக்கு சில கிறிஸ்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 28 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், ஐ.எஸ் இயக்கத்தினரின் மீது அனைவரின் சந்தேகங்களும் சென்றுள்ளது.

ஏற்கனவே பல முறை கோப்டிக் கிறிஸ்தவர்களை குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதில், அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, இந்த தாக்குதலையும் அவர்கள் தான் நிகழ்த்தியிருக்க கூடும் என முடிவு செய்துள்ள எகிப்து ராணுவம் ஐ.எஸ் இயக்கம் மீது பதில் தாக்குதல்களை நடத்த தொடங்கியது.

அதன்படி, லிபியாவில் உள்ள ஐ.எஸ் இயக்கத்தினரின் மறைவிடங்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்துவதற்காக எகிப்து போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த தகவல்களை வீடியோவாக எகிப்து ராணுவ செய்தி தொடர்பாளர் தாமர் எல்-ராபே தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக கோப்டிக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த எகிப்து அதிபர் அப்டெல் பதாஃ எல்-சிசி தீவிரவாதிகளின் முகாம்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என ராணுவத்தினருக்கு தான் உத்தரவிட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். இதே தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ’இரக்கமற்ற படுகொலை’ என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.