Jun 11

நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டாரா ஜஸ்டின் ட்ரூடோ?

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 

ஜி7 மாநாட்டையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது என்றும், இந்த வரி விதிப்பின் மூலம் அமெரிக்கா பிற நாடுகளை அவமதித்துள்ளதாகவும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ஜி 7 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ள டொனால்ட் டிரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவின் பேட்டி குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், மாநாட்டில் தான் பங்கேற்றபோது, இதமான முறையில் நடந்து கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, தான் சென்ற பிறகு இவ்வாறு கூறியிருப்பது நேர்மையற்ற செயல் என கண்டித்துள்ளார்.

எனவே, ஜி 7 மாநாட்டுத் தீர்மானங்களை அமெரிக்கா புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பால் பொருட்களுக்கு கனடா விதித்துள்ள 270 சதவீத வரிக்கு பதிலடியாகவே, அமெரிக்காவின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.