May 26

ஓய்வுபெற்ற இந்திய மத்திய ரிசேர்வ் காவல்துறை அதிகாரிக்கு கனடாவிற்குள் பிரவேசிக்கத் தடை

இந்திய மத்திய ரிசேர்வ் காவல்துறை மா அதிபராக  (CRPF inspector general of police) 2010 இல் பதவி வகித்து இளைப்பாறியவர் தேஜிந்தர் சிங் டிலோன்.

இவர் கனடாவிற்கு முறைப்படி விசா பெற்று வான்கூவர் சர்வதேச  விமான நிலையத்திற்கு சென்ற வாரம்  வந்திறங்கினார். ஆயினும் கனேடியக் குடிவரவு அதிகாரிகள் அவரைக் கனடாவினுள் அனுமதிக்க இல்லை.

“பரந்துபட்ட மற்றும் திட்டமிட்ட முறையில்” மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு படையணியில் சேவையாற்றியமைக்காகவே அவர் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டார், எனத் தெரிவிக்கப்பட்டது.

கனேடிய அகதிகள் மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவுகளுக்கமையவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நடவடிக்கை, இந்திய அரசானது “பயங்கரவாதம், திட்டமிட்ட முறையிலான மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை” போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்பதாகக் கருதப்பட்டுள்ளது என அர்த்தப்படுத்தப்படுவதால், இந்திய-கனேடிய உறவுகளில் விரிசல்கள் ஏற்பட இடமுண்டு என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கனேடிய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகளின் படி , இவருக்குக் கனேடிய அரசினால் விசா வழங்கப்பட்டுள்ளதுடன், இலவச விமானப் பிரயாணச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.