May 26

தமிழ் உணர்வு இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்: கமல் ஹாசன்

தமிழ் உணர்வு இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்'' என்று நடிகர் கமல்ஹாசன் இன்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று விஜய் டிவியின் ''பிக் பாஸ்'' தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல் ஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். போட்டி அரசியலில் நான் இல்லை, நான் அரசியலுக்கு வந்து வெகு நாளாகிவிட்டது. எப்போது கையில் மை வைத்தேனோ அப்போதே வந்துவிட்டேன்.

தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக் கூடாது. அரசியல் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் சேவை மனப்பான்மையுடன் இல்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியதில் தவறில்லை, வித்தியாசமானதும் இல்லை. என்னைக் கூட மலையாளி என்று கேரளாவில் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதற்காக நான் கேரளாவில் முதல்வர் ஆவேன் என்பது அர்த்தம் அல்ல. எனக்கு அதில் விருப்பமும் இல்லை'' என்றார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். சமீபத்தில் இதற்கான டீசர் வெளியாகி டுவிட்டரில் டிரண்டாகி இருந்தது. இதுகுறித்து பேட்டியளித்து இருந்த கமல், ''பணத்திற்காக நான் இந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டேன்'' என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.