May 26

உயர்கல்வித்துறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்: திருமாவளவன்

உயர்கல்வித்துறையிலும் உரிய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பள்ளிக்கல்வித்துறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களை விடுதலைச்சிறுத்தகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். அந்த சீர்திருத்தங்களின் ஒரு அங்கமாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது மாணவர்களின் சுமையை அதிகரிப்பதாக உள்ளது. எனவே, பொதுத் தேர்வுக்குப்பதிலாக இருபருவத்தேர்வு முறையை (செமஸ்டர்) நடைமுறைப் படுத்த வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் நோக்கில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் பிளஸ் -1 வகுப்புப்பாடங்களை நடத்தாமல் இரண்டு ஆண்டுகளிலும் பிளஸ் -2 பாடங்களையே நடத்தி வந்தன. அதனால், உயர் கல்வி வகுப்புகளில் சேரும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே தான், பிளஸ் -1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சிலரால் முன் வைக்கப்பட்டது.

அதில் நியாயம் இருந்தாலும் அது மாணவர்களின் தேர்வுச்சுமையை அதிகரித்து மன அழுத்தத்துக்கு அவர்களை ஆளாக்கிவிடும் என்பதால் பட்ட வகுப்பில் இருப்பது போல இருபருவத் தேர்வு முறையை பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

பள்ளிக்கல்வியின் பகுதியாக பள்ளிகளில் இடை நிறுத்தத்துக்கு முதன்மையான காரணம் நமது தேர்வு முறைதான். தரம் தகுதி என்ற தவறான கருத்தாக்கங்களின் அடிப்படையில் நமது தேர்வு முறை அமைக்கப்பட்டுள்ளது.

மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கும் இப்போதைய தேர்வு முறை மாணவர்களின் சிந்திக்கும் திறனையே பாழக்கிவிடுகிறது. இந்த முறையில் கல்விபயிலும் மாணவர்கள், வாழ்க்கையின் எந்தபொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாதவர்களாக எல்லாவற்றுக்கு ஆயத்தமான முன்பே தயார்க்கப்பட்ட தீர்வுகளைத் தேடுகிறவர்களாக மாற்றப்படுகிறார்கள். இந்தச்சார்பு மனோநிலை மாணவர்களைத் தற்சார்பு அற்றவர்களாக்கி விடுகிறது.

இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்து பள்ளியில் சேர்கிற அனைவருமே பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயர் கல்வியைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கேற்ப நமது உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.

ஒரு நாட்டின் வளங்களிலேயே மிகவும் சிறந்தது மனித வளம் தான்.அதைப்புரிந்து கொண்ட நாடு தான் முன்னேறும். எனவே, பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு ஒத்திசைவான முறையில் உயர்கல்வித்துறையிலும் உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.