Jun 02

பிரதான கட்சிகள் ஒன்ராறியோவின் தென்பிராந்தியத்தில் பரப்புரை

ஒன்ராறியோ மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருக்கும் நிலையில், மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு இடங்களில் தங்களின் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று முக்கிய மூன்று கட்சிகளான லிபரல், புதிய ஜனநாயக் கட்சி, முற்போக்குப் பழமைவாதக் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் ஒன்ராறியோவின் தெற்கு பிராந்தியத்தில் தமது பரப்புரைகளை தீவிரப்படுத்தவுள்ளனர்.

கிழக்கு ஒன்ராறியோவின் Orleans பகுதியில் இன்று காலையில் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளும் லிபரல் கட்சித் தலைவர் கத்தலின் வின்,அங்கு அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சென் அல்பேர்ட் பகுதியில் உள்ள வெண்ணெய்க் கட்டித் தொழிற்சாலை ஒன்றுக்கு செல்லவுள்ளதுடன், Bellevilleஇல் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இன்று மாலையில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறே புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத், இன்று ரொரன்ரோவில் நடைபெறும் தேர்தல் பரப்புரைகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன், இதன்போது அவரும் அறிவிப்பு ஒன்றினை வெளியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர் இன்று இரவு மிசிசாகா சென்று அங்கு இரவு விருந்துடன் கூடிய நிகழ்வு ஒன்றிலும் புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத் பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட் இன்று காலையில் ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு அறிவிப்புகளை வெளியிடவுள்ளதுடன் , பின்னர் இன்று மாலை வினட்சர் பகுதியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார்.