May 30

பிரான்சில் சேரன் செங்குட்டுவன் !

பிரான்சில் சேரன் செங்குட்டுவன் ! அரங்கு சிறத்த சரித்திர நாடகம் !!

கலைகளின் தலைநகராம் பாரிசின் புறநகர் பகுதியில் 'சேரன் செங்குட்டுவன்' சரித்திர நாடகம் அரங்கு சிறக்க அவை கண்டது.

பிரான்ஸ் - தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் நடாத்தப்பட்டிருந்த துளிர்க்கும் காலம் செந்தமிழ் மாலை எனும் பல்சுவை நிகழ்ச்சியிலேயே இச்சரித்திர நாடகம் அவை கண்டது.

முப்பத்துக்கும் மேற்பட்ட கலைநகர் நேருஜி கலாமன்ற லண்டன் கலைஞர்கள் இதனை வழங்கியிருந்தனர்.

பரிசின் புறநகர் பகுதியான ஒல்னே சு புவா பகுதியில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்ச்சியில் சின்னக்குட்டி ரீ.தயாநிதியின் நல்லவர்கள், ஈழவிழி புனிதமலரின் நாட்டுப்புற பாடல், மகிழ்பறை, சலங்கை நடனக்கலைஞர்களின் தமிழ் பறை அபிநய நடனம் மற்றும் சுருதி இசைக்குழுவின் மெல்லிசை கானங்கள், கனியின்  நெறியாள்கையில் இசை எழுச்சி என பல நிகழ்வுகள் அரங்கை ஆளுகை செய்திருந்தன.

முன்னராக ஒல் நே சுபுவா நகர சபை துணை முதல்வர், நகரசபை பிரதிநிதிகள், டிறான்சி நகர சபை உறுப்பினர் உட்பட பலரும் பங்கெடுத்து நிகழ்வினை சிறப்புடன் தொடக்கி வைத்திருந்தனர்.

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரதிநிதிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், அனைத்துலக தொடர்பக பிரதிநிதி ஆகியோரது உரைகளும் இடம்பெற்றிருந்தன.

அருள் சொனோ ஒலி அமைப்பினை வழங்க நிகழ்வினை கலையகழகன், அருண்மொழித்தேவன், செல்வி துளசி ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.