May 30

வடக்கில் மாட்டிறைச்சியை முன்வைத்து எழும் பிணக்குகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

மாட்டிறைச்சிக்கு எதிரான மனநிலையை, தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பும் முயற்சியொன்று கடந்த சில வருடங்களாக மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. மாட்டிறைச்சியை முன்னிறுத்திய மத அடிப்படைவாதம், இந்தியா போன்று, இலங்கைக்கும் புதியதல்ல. முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்காக பௌத்த அடிப்படைவாதிகளும், அதுசார் நிறுவனங்களும் மாட்டிறைச்சி விவகாரத்தை, தென் இலங்கையில் அவ்வப்போது, தூசி தட்டித் தூக்கிப் பிடிப்பதுண்டு. அவ்வாறானதொரு நிலையை, தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி, மத அடிப்படைவாதத்தை மேல் மட்டத்தில் பேணுவதற்காகச் சில தரப்புகள் ஒன்றிணைந்திருக்கின்றன. 

ஆறுமுகநாவலர் காலத்து யாழ்ப்பாணத்தில், மாட்டிறைச்சிக்கு எதிரான மனநிலை குறிப்பிட்டளவில் மேலெழுந்திருந்தது. ஆனாலும், அது மெல்ல மெல்லக் காணாமற்போனது. தமிழ் மக்களின் மாமிசத் தேவையை, கால காலத்துக்கும் நிவர்த்தி செய்து வந்ததில், மாட்டிறைச்சியின் பங்கு கணிசமானது. அதுவும், ஆயுத மோதல்கள் நீடித்த காலப்பகுதியில், தமிழ் மக்கள் மாமிச உணவுக்காக, மாட்டிறைச்சியிலேயே பெருமளவு தங்கியிருக்க வேண்டியிருந்தது. தற்போதுள்ளது போல, அந்தக் காலப்பகுதியில் ‘புரொயிலர்’ கோழிகளுக்கான வாய்ப்பு இருக்கவில்லை. நாட்டுக்கோழி, ஆட்டிறைச்சி என்பன எப்போதாவது விழாக்கால மாமிசங்களாகப் பகிரப்பட்டன. ஏனெனில், அவற்றின் விலை மலையளவுக்கு இருந்தன. மாட்டிறைச்சியின் விலைதான், சாதாரண மக்களின் பக்கத்தில் இருந்தது.

உணவை முன்னிறுத்திய அரசியல் என்பது வீரியமானது. அதுதான், நாகரீகங்களை நோக்கி, மனிதனைத் தள்ளியது. ஆனால், உணவை முன்னிறுத்திய அடிப்படைவாதம் என்பது, குறிப்பாக மத அடிப்படைவாதம் என்பது, சகமனிதனை அவன் உட்கொள்ளும் உணவை வைத்து, தரம் பிரித்து வகைப்படுத்துகின்றது. ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனைத் தாழ்ந்தவனாகவும் வடிவமைக்கின்றது. அதன்மூலம், பிரிவினை அரசியலை, மேல் மட்டத்தில் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக, மாட்டிறைச்சியை முன்வைத்து எழுந்திருக்கின்ற பிரச்சினைகளை நோக்கும் போது, இந்தத் தன்மையையும் உணர்ந்து கொள்ள முடியும்.

உண்மையிலேயே, யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி தொடர்பில் எழுந்திருக்கின்ற பிரச்சினைகளை, இரண்டு கட்டங்களாக நோக்க வேண்டும். முதலாவது, சட்டத்துக்குப் புறம்பாக வேட்டையாடப்படும் மாடுகள் சார்ந்த பார்வை. இரண்டாவது, மாட்டிறைச்சியை முன்வைத்துச் செய்யப்படும், மத அடிப்படைவாதம் சார்ந்த பார்வை.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு- கிழக்கில், ஆயுத மோதல்களால் ஏற்பட்ட இடம்பெயர்வுகள், தமிழ் மக்களைத் தமது வீடு, வளவுகளை, நில புலன்களை மாத்திரமல்ல, ஆயிரக்கணக்கான கால்நடைகளையும் விட்டே நடைபோட வைத்தன. தமிழ் மக்களின் வாழ்வு என்பது, கால்நடைகளையும் பகுதியளவாகக் கொண்டதுதான். ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என்பது, பிள்ளை வளர்ப்புப் போல, தாய்மார்களின் இன்னொரு கடமையாக, ஒரு காலம் வரையில், தமிழ்ச் சூழல் கருதி வந்தது. அப்படியான நிலையில், இடம்பெயர்வுகள், கால்நடைகளை நடு வழியில் விட்டு வர வைத்தன. ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் இடப்பெயர்வுகள் என்றால், கால்நடைகளை மீளவும் தேடிப்பிடித்து, பராமரிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இடம்பெயர்வுகள், கால்நூற்றாண்டையெல்லாம் தாண்டி, நீளும் சூழல் ஏற்படும் போது, கால்நடைகளின் பராமரிப்பு என்பது, இயலாத ஒன்று.

அவற்றின் ஒரு வடிவத்தையே, கட்டாக்காலி மாடுகள் வடிவில் தற்போது நாங்கள் எதிர்கொண்டு நிற்கிறோம். புங்குடுதீவு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளும், வரணி உள்ளிட்ட நாகர்கோவில்- எழுதுமட்டுவாள் இராணுவ மண் அரணுக்கு அருகாமையாக இருந்த பகுதிகளும் வலிகாமமும் கட்டாக்காலி மாடுகளால் நிறைந்திருக்கின்றன. இந்த மாடுகளைக் குறிவைத்த இறைச்சி ‘மாபியா’ வியாபாரம் என்பது, தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஏனெனில், கட்டாக்காலி மாடுகள் என்பது, இரு இனத்தின் மீதான ஆக்கிரமிப்பின் வடிவில், சிதறிப்போன அடையாளங்கள்தான். அவை, மீட்கப்பட வேண்டியவை. அதாவது, நீல மீட்பு மாதிரியாக, கால்நடை மீட்பும் செய்யப்பட வேண்டியது. இதுதொடர்பில், வடக்கு மாகாண சபையை நோக்கிய கோரிக்கைகள், தொடர்ச்சியாக விடுக்கப்பட்டே வந்திருக்கின்றன.

கட்டாக்காலி மாடுகளைப் பிடித்து, அவற்றை மீளவும் மக்களோடு இணக்கமாக, கால்நடைகளாக மாற்ற வேண்டும். அடையாளம் காணப்படும் மாடுகள், உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அடையாளம் காண முடியாத மாடுகளை, வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சு, பண்ணையாகப் பேணி, பால் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அல்லது, குறிப்பிட்ட விலைக்கு, மக்களிடம் பகிர்ந்தளிப்பதன் மூலம், சிதறிப்போன, கால்நடை வளர்ப்பை மீளவும் தக்கவைத்துக் கொள்ள முடியும். அதன்மூலம், ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பைப் பெறும் சூழலும் உருவாகும். ஆனால், அவற்றுக்கான முயற்சிகள் வேகமாகவும் முறையாகவும் முன்னெடுக்கப்படாத சூழல் நீடிக்கும் பட்சத்தில், கட்டாக்காலி மாடுகளை நோக்கிய இறைச்சி ‘மாபியா’க்களின் குறி நிற்காது.

இன்னொரு கட்டத்தில், இந்த இறைச்சி ‘மாபியா’க்களின் வலைப்பின்னல் என்பது, நிர்வாகக் கட்டமைப்புகள் மாத்திரமல்ல, பொலிஸ் வரை விரிந்திருக்கின்றது. இதனால், மாடு கடத்தல்களும், வெட்டுதல்களும் பாரதூரமான அளவில் நடைபெற்று வருகின்றன. உணவுக்காக மாடறுத்தல் என்பதையும், இந்த இறைச்சி ‘மாபியா’க்களின் மாடறுத்தலையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவையுண்டு. அதிக நேரங்களில் இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்ளும் சூழல் உருவாகின்றது.

கட்டாக்காலி மாடுகளை நோக்கி, இறைச்சி ‘மாபியா’க்களின் பாய்ச்சலை, தமிழ் மக்கள் தங்கள் மீதான அடக்குமுறையாக, அத்துமீறலின் ஒரு வடிவமாகவே கருதுகிறார்கள். ஏனெனில், தங்களது வாழ்வோடு இருந்த ஒன்றை நோக்கி கத்திகளும் வாள்களும் நீள்வதை எந்தவொரு சமூகமும் சகித்துக் கொள்ளாது. அது, அவர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விடயம். குறிப்பாக, இடப்பெயர்வுகளால் சிதைத்துபோன வீடுகள், வளவுகளுக்குள் வைத்து, இறைச்சி ‘மாபியா’க்கள் மாடுகளை வெட்டும் காட்சிகள், இன அழிப்பொன்றை எதிர்கொண்டு நிற்கின்ற சமூகத்திடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறான சூழலை, மத அடிப்படைவாதிகள் தமது திட்டங்களைச் செயற்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோபத்தை, மடை மாற்றம் செய்கிறார்கள்; அதன் மீது, மத அடிப்படைவாதத்தை விதைக்கின்றார்கள்.

மாட்டிறைச்சிக்கு எதிரான மனநிலையை தமிழ் மக்களிடம் வளர்ப்பதன் மூலம், முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை இன்னமும் அதிகரித்துக் கொள்ள முடியும் என்று மத அடிப்படைவாதிகள் கருதுகிறார்கள். அதற்காக, தமிழ் மக்களைக் கருவறுத்த பௌத்த அடிப்படைவாதத்தோடு கை கோர்ப்பதற்கும் தயாராக இருக்கின்றார்கள். இந்த இடத்தில்தான், தமிழ் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியிருக்கின்றது. மாட்டிறைச்சியை முன்வைத்து, எழுந்திருக்கின்ற பிரச்சினைகளின் அடிப்படை என்ன? அதற்கான தீர்வின் கட்டங்களை எங்கிருந்து பெற வேண்டும் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

ஏனெனில், சட்டவிரோத மாடு வெட்டுதல், கட்டாக்காலி மாடுகளைக் குறிவைத்து இறைச்சி ‘மாபியா’க்கள் குறித்ததான விடயங்களைச் சமூக- நிர்வாக ரீதியாக, முறையாகக் கையாள வேண்டும். மாறாக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தையோ, பௌத்த அடிப்படைவாதத்தையோ துணைக்கு அழைப்பது என்பது, பாழும் கிணற்றில் விழுவதற்கு ஒப்பானது.

முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறி வைத்த தாக்குதல்கள், தென் இலங்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. அந்தத் தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக பொது பல சேனா, ராவண பலய உள்ளிட்ட பௌத்த அடிப்படைவாத அமைப்புகளும், நிறுவனங்களும் கூறிய காரணங்களைத் தூக்கிக் கொண்டு, வடக்கு, கிழக்கை நோக்கியும் புதிதாகச் சிலர் வந்திருக்கின்றார்கள். அவர்களில், மறவன்புலவு சச்சிதானந்தனும், அவரின் சிவ சேனை அமைப்பும் முக்கியமானது.

அப்படியான நிலையில், மாட்டிறைச்சி தொடர்பிலான பிரச்சினைகளின் உண்மைத் தன்மையை விளங்காது, விடயங்களை அவர்களின் கைகளில் வழங்குவோமாக இருந்தால், அது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஒவ்வொரு பிரச்சினையையும் பகுப்பாய்ந்து கொள்வதுதான், தீர்வுக்கான நேர் வழி. அதுதான், மாட்டிறைச்சியை முன்வைத்து எழுந்திருக்கின்ற பிரச்சினைகளுக்கும் இப்போது தேவைப்படுகின்றது.