Mar 13

கடந்த காலத்தை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள்!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசித்து வருகிறார் ஹுவா யுன்கிங் (62). கடந்த 36 ஆண்டுகளாக தனது மகளுடன் சேர்ந்து ஜென்ஜியாங் ஏரியில் புகைப்படம் எடுத்து வருகிறார். 

ஒரு வயது ஹுவாஹுவாவை அழைத்துக்கொண்டு ஏரிக்கு வந்தபோது, தற்செயலாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அடுத்த ஆண்டும் அதே ஏரிக்கு மகளுடன் வந்து, ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகுதான் ஒவ்வோர் ஆண்டும் தன் மகளுடன் ஏரியில் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 

கடந்த 36 ஆண்டுகளாக அப்பாவும் மகளும் அதே ஏரியில் புகைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். 1998-ம் ஆண்டு மட்டும் ஹுவாஹுவா விடுமுறைக்காக வெளியூர் சென்றுவிட்டார். 36 ஆண்டுகளில் 35 புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை வரிசையாக வைத்துப் பார்க்கும்போது, ஹுவாஹுவாவின் வளர்ச்சி தெரிகிறது. 

இவர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கும் ஏரியும் பல மாற்றங்களைச் சந்தித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஹுவாஹுவாவுக்கு திருமணமாகி, குழந்தைகள் பிறந்தபோதும் பேரன், பேத்தியுடன் சேர்ந்து ஏரியில் புகைப்படம் எடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் ஹுவா யுன்கிங்.