May 26

பிரதி சபாநாயகர் பதவியைக் கோருவதற்கு கூட்டமைப்பிற்கு உரிமை இல்லை: திஸ்ஸ விதாரண

பிரதி சபாநாயகர் பதவியைக் கோருவதற்கு கூட்டமைப்பிற்கு தார்மீக உரிமை கிடையாது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அதிக எண்ணிக்கையினைக் கொண்ட எதிர்த்தரப்பினரைக் கூட்டு எதிரணியினர் கொண்டிருக்கின்றனர். இதனால் பிரதி சபாநாயகர் பதவியைக் கூட்டு எதிரணியினருக்கே வழங்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவியானது முக்கியமான பதவியாக காணப்படுவதுடன், சபாநாயகர் நடுநிலையாகச் செயற்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் இம்முறைமை காணப்படவில்லை என்பதுடன், தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமருக்கு ஆதரவாகவே தொடர்ந்தும் செயற்படுகின்றார்.

நாடாளுமன்றத்தில் பெயரளவு எதிர்க்கட்சியாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பிரதி சபாநாயகர் பதவியைக் கோருவதற்கு எவ்வித உரிமைகளும் கிடையாது என்பதுடன், எதிர்க்கட்சிப் பதவியின் கடமைகளை மறந்தே இவர்கள் அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்த் தரப்பிலிருந்தே ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.