May 25

மூன்று வருட சேவைக் காலம் சேர்க்கப்படாது பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிறீதரன் எம்.பிடம் கோரிக்கை!

தமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 2013 ஆம் ஆண்டிலிருந்தே தமது சேவைக் காலத்தைக் கணக்கிட ஆவன செய்யுமாறு கோரி 3 வருட சேவைக் காலம் சேர்க்கப்படாது பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞனம் சிறீதரன் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி தமது கோரிக்கை அடக்கிய கடிதத்தையும் கையளித்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தும் மூன்று வருட சேவைக் காலம் கணக்கிடப்படாது பாதிக்கப்பட் ஆசிரியர்களது பிரதிநிதிகள் கடந்த சனிக் கிழமை (19.05.2018) அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினரது கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களைச் சந்தித்து தமது கோரிக்கை தொடர்பில் எடுத்துக் கூறிக் கலந்துரையாடி தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவரிடம் கையளித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவர்களிடம் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் 'உங்களது கோரிக்கைகள் நியாயமானவை, இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட உங்களது கோரிக்கை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்குக் கொண்டுவந்து அதற்கான நடவடிக்கையைச் செய்யவுள்ளதாகவும்' கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தில்,

01.07.2013 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்த எமக்கு அதே திகதியிலிருந்து சேவைக் காலத்தைக் கணித்தல்.

வடமாகாணத்தில் கடந்த 01.07.2013 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்து ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட எமது சேவைக் காலத்தை 01.08.2016 இல் இருந்து தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது சேவைக் காலம் மூன்று வருடங்களால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றிலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த யுத்த காலம் உள்ளடங்கலாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, வடமராட்சி கிழக்கு, மடு போன்ற கல்வி வலயங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கடந்த 15 வருடத்திற்கும் மேலாக எவ்வித கொடுப்பனவுமற்ற நிலையில் தொண்டர் ஆசிரியர்களாச் சேவையாற்றி வந்த எமக்கான நிரந்தர ஆசிரியர் நியமனம் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் வசித்தோம் என்ற காரணத்தாலும், அரசியல் காரணங்களாலும் அப்போது வழங்கப்படாது நாம் மட்டுமே புறக்கணிக்கப்பட்டிருந்தோம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வடமாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போதுகூட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற அரச கட்டுப்பாடற்ற பகுதியில் வசித்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த நிலையில் செட்டிகுளம் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள் எவருக்குமே நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படாது நாம் மட்டும்தான் புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்தோம்.

நிரந்தர நியமனத்தில் நாம் தொடர்ந்தும் திட்டமிட்டுப் புறக்கணித்து ஒதுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி எமக்கான நியமனத்தை வலியுறுத்தி நாம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டம் காரணமாக கடந்த 01.07.2013 இல் எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி வடமாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளையும் முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறியுள்ளோம்.

இந்நிலையில் எமது முதல் நியமனத் திகதி 01.07.2013 என இடப்பட்ட போதிலும் தற்போது எமக்கு ஆசிரியர் சேவை தரம் 3-1 வழங்கப்பட்ட 01.08.2016 திகதியிலிருந்தே எமது முதல் நியமனத் திகதியாகக் கருதி எமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எமக்கு நியமனம் கிடைத்து நாம் சேவையாற்றிய மூன்று வருட காலப்பகுதி எமது சேவைக் காலமாகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

ஏற்கனவேயும் வடமாகாணத்தில் நியமனம் வழங்கப்படும் போது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட நாம் தற்போதும் நியமனம் கிடைத்துச் சேவையாற்றிய எமது சேவைக் காலத்தில் மூன்று வருடத்தைச் சேர்க்காமல் விட்டுள்ளமையால் ஆசிரியர் சேவையில் எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே எமது சேவைக் காலம், வயது என்பவற்றினைக் கருத்திற்கொண்டு எமக்கு வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 இல் இருந்து எமது சேவைக் காலத்தை ஆசிரியர் சேவை தரம் 3-11 ஆகக் கணித்து விடுபட்டுள்ள எமது சேவைக் காலமும் சேர்க்கப்பட ஆவன செய்யுமாறு தங்களை நம்பிக்கையோடு மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.