Mar 13

இரண்டு கால்களுடன் வலம் வரும் சூப்பர் சிமோன்

நியூசிலாந்தின்,ஆக்லாந்தில் வசிக்கும் ராபர்ட், 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் ஒரு காலை இழந்த பூனையைத் தத்தெடுத்தார். மூன்று கால்களுடன் சிமோன் இயல்பாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் பக்கத்துவீட்டு நாய், சிமோனை மிக மோசமாக தாக்கியது. 

அடிபட்ட சிமோனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார் ராபர்ட். “மிக மோசமான பாதிப்பு. ஒரு காலை எடுத்தால்தான் சிமோன் பிழைக்கும் என்றார் மருத்துவர். வேறு வழியின்றி சம்மதித்தோம். நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகு சிமோன் உடல் தேறியது. 

நடக்க ஆரம்பித்தபோது, தன்னுடைய காலைத் தேடும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு ஆச்சரியம். தனக்கு இன்னொரு கால் இல்லை என்ற எண்ணமே சிமோனுக்கு ஏற்படவில்லை. இரண்டு கால்களுடன் மெதுவாக நின்று பழகியது. பிறகு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது. சிமோன் உயிர்ப் பிழைத்து, 

இரண்டு கால்களோடு வாழ்க்கையை அழகாக எதிர்க்கொண்ட விதத்துக்கு முன்னால் நாங்கள் சிகிச்சைக்காகச் செலவு செய்த 14.5 லட்சம் ரூபாய் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் இன்னும் இயல்பாக மாறிவிட்டது. வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையோடும் மகிழ்ச்சியோடும் எதிர்கொள்கிறது. சிமோனைப் பார்த்து மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கிறது” என்கிறார் ராபர்ட்.