Mar 13

ரேஷன் கடைகள் முன்னால் திமுக போராட்டம்: கனிமொழி கைது

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி இன்று திங்கட்கிழமை தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுகவினர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

ரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒரு வாரத்தில் உறுதி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என கடந்த வாரம் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆளுங்கட்சித் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாகக் கூறி, இன்று திங்கட்கிழமை தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இதில் திமுக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் ரேஷன் கடையின் முன்னதாக போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய கனிமொழி, ''பாமாயில், பருப்பு, ஆயில் இல்லை என்பதுதான் நியாய விலைக் கடைகளின் இன்றைய நிலை.

ரேஷன் கடைகளில் எந்தப் பொருளையுமே வாங்க முடிவதில்லை. அங்கிருக்கும் அரிசி, யாராலும் வாங்கிப் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறது. அதிமுகவினரே இதற்குக் காரணம்.

எந்த எம்எல்ஏ சென்றுவிடுவார் என்ற எண்ணத்திலேயே அவர்கள் இருக்கிறார்களே தவிர, மக்கள் மேல் அக்கறை கொள்ளவில்லை. ஆட்சியைக் காப்பாற்றும் திட்டத்தில்தான் அதிமுக ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். மக்கள் நலத் திட்டத்தை அவர்கள் யோசிப்பதே இல்லை. அதிமுக ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.'' என்றார்.

இந்நிலையில், கனிமொழி மற்றும் திமுக மகளிர் அணியினர் சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ''பொது விநியோகத் திட்டம் முழுவதுமாக சீர்குலைந்துள்ளது. அதிமுகவினர் ரேஷன் கடை பொருட்கள் விநியோகம் குறித்து கவலைகொண்டது போலவே தெரியவில்லை'' என்று திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அதேபோல திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் போராட்டம் நடத்திக் கைதானார்.