May 22

சன்ரைசர்ஸ் - சூப்பர் கிங்ஸ் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 தொடரின் 11வது சீசன் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான குவாலிபயர் 1 பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. பரபரப்பான இப்போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 8 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் லீக் சுற்றில் மோதின. விறுவிறுப்பான லீக் சுற்றில் அனைத்து அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 18 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்த சன்ரைசர்ஸ் முதலிடம் பிடித்தது. சென்னை அணிக்கு அடுத்த இடம் கிடைத்தது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 புள்ளிகளுடன் 3வது இடமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4வது இடமும் பிடித்தன. தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்த பெங்களூர், மும்பை, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து ஏமாற்றத்துடன் வெளியேறின. டெல்லி டேர்டெவில்ஸ் அணி 10 புள்ளிகளுடன் கடைசி இடம் பிடித்தது.  லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் சுற்றில் மோதுகின்றன. மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் குவாலிபயர் 1 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் - சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. அரை இறுதியாகவே அமைந்துள்ள இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 27ம் தேதி மும்பையில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகளிடையே நாளை நடைபெறும் எலிமினேட்டர் (கால் இறுதி) போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், குவாலிபயர் 1ல் தோற்ற அணி மே 25ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் 2வது குவாலிபயர் ஆட்டத்தில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு முன்னேறும். இந்த நிலையில், இன்றைய போட்டியில் வென்று நேரடியாக பைனலுக்குள் நுழைய ஐதராபாத், சென்னை அணிகள் வரிந்துகட்டுகின்றன. கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி நடப்பு சீசனின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும், குறைந்த ஸ்கோர் அடித்த போட்டிகளிலும் கூட துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கால் எதிரணியை கட்டுப்படுத்தி வென்றது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளைப் பதிவு செய்து முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும், கடைசி 2 லீக் ஆட்டத்தில் தோற்றது ஐதராபாத் அணிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. தொடக்க வீரர்கள் தவான், ஹேல்ஸ், கேப்டன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். குறிப்பாக, வில்லியம்சன் 14 போட்டியில் 661 ரன் குவித்து டாப் 10ல் 2வது இடத்தில் உள்ளார். 

இவர்களுடன் ஷாகிப் ஹசன், யூசுப் பதானும் அதிரடி காட்டினால் சவாலான இலக்கை நிர்ணயிக்கவும், துரத்தவும் முடியும். பந்துவீச்சிலும் ரஷித் கான், சித்தார்த் கவுல். சந்தீப் ஷர்மா அசத்தி வருகின்றனர். புவனேஷ்வர், ஷாகிப் அல் ஹசன் இருவரும் அதிக ரன் விட்டுக் கொடுப்பது சற்று கவலை தரும் அம்சம். எனினும், நடப்பு தொடரில் மிகச் சிறந்த பந்துவீச்சு படையாக உருவெடுத்திருக்கும் ஐதராபாத் அணி மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. அதே சமயம், டோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயுடு, வாட்சன், டோனி என மூன்று சிஎஸ்கே வீரர்கள் ரன் குவிப்பு டாப் 10ல் இடம் பெற்றிருந்தாலும், விக்கெட் வேட்டையில் அந்த அணி சற்று பின்தங்கியே உள்ளது. சன்ரைசர்சில் ரஷித் கான், சித்தார்த் கவுல் இருவரும் டாப் 10ல் இடம் பிடித்திருக்கும் நிலையில், சென்னை பந்துவீச்சாளர் ஒருவர் கூட இதில் இடம் பெறவில்லை. எனினும், டோனியின் அனுபவத் தலைமை அந்த அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். சம பலம் வாய்ந்த இரு அணிகளுமே  வெற்றி முனைப்புடன் களமிறங்குவதால், இன்றைய ஆட்டம் கடைசி பந்து வரை ரசிகர்களுக்கு சுவாரசியமான விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.