May 25

ஜாமீனில் வெளியே வந்தார் வைகோ: பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டதாக குற்றச்சாட்டு

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, ஜாமீனில் இன்று வெளியே வந்தார். அப்போது, பழிவாங்கும் நோக்கத்தில் தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஜாமீனில் வெளியில் செல்ல விரும்பாமல் இருந்தார்.

அவர் ஜாமீன் பெற்று வெளியே வரவேண்டும் என கட்சி தொண்டர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்ட நிலையில், சென்னை மாவட்ட செசன்சு கோர்ட்டில் வைகோ திடீரென ஜாமீன் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனு 4-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி புருஷோத்தமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால், எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல், வைகோவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜாமீன் தொடர்பான நடைமுறைகள் முடிந்தபின்னர் இன்று புழல் சிறையில் இருந்து வைகோ வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-

பழிவாங்கும் நோக்கத்திலேயே என் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். சிறைவாசம் என்னை நானே ஆய்வு செய்ய கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாலும், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்றும் ஜாமீனில் வெளிவந்துள்ளேன். 

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கத்தக்கது. அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மதுக்கடைகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களை காவல்துறையால் முடக்க முடியாது. மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது நடத்தப்டும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு பூரண மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.