May 25

டெல்லிக்குச் சென்று பிரதமருடன் சந்திப்பு! இப்படியெல்லாமா மக்களை ஏமாற்றுவது? முதல்வருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி டெல்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக அவர் பதவியேற்றதிலிருந்து இந்த நான்கு மாதங்களில் பிரதமரை அவர் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.

ஒவ்வொரு தடவையும் பிரதமரை சந்தித்த பின் ஊடகத்தினரையும் அவர் சந்தித்தார். ஆனால் ஊடகத்தினருக்கு அவர் அளித்த செய்தியில் எந்தவித மாற்றமும் இருக்கவில்லை. வழக்கமாகச் சொல்லும் ஒரே செய்தியைத்தான் இப்போதும் சொல்லியிருக்கிறார்.

அதாவது “தமிழகத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரினேன்” என்பதாகும்.

“காவிரி மேலாண்மை வாரியத்தையும் நீர் ஒழுங்காற்றுக் குழுவையும் அமைக்குமாறு கேட்டுக் கொண்டேன். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் மானியத்தில் 500 கோடி உயர்த்தித் தர வேண்டும் என்றேன். தமிழகத்தில் நடக்கும் மத்திய அரசு சார்ந்த திட்டங்களில் விடுவிக்கப்படாமல் இருக்கும் 17000 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என்றேன். வறட்சி நிவாரணத் தொகை பாக்கியையும் வழங்க வேண்டும் என்றேன். நீட் தேர்விலிருந்தும் தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்றேன்…” – இவ்வாறாக முதல்வர் பட்டியலிட்டு பலவற்றைச் சொன்னார்.

இவர் சொன்னவையெல்லாம் இன்று நேற்று உள்ள பிரச்சனைகள் அல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே தொடர்பவைதான். ஜெயலலிதாவும் இந்த கோரிக்கைகளுக்காக பிரதமரை சந்தித்திருக்கிறார்.

அவருக்குப் பின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரை சந்தித்து இந்தக் கோரிக்கைகளை வைத்ததாகச் சொன்னார்; பதவி இழந்தபின் இப்போதும் எடப்பாடியார் பிரதமரை சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பன்னீரும் பிரதமரை சந்தித்து இதை வலியுறுத்தியதாகச் சொன்னார்.

அதன்பின் எடப்பாடி முதல்வரான பின் ஏற்கனவே இரண்டு தடவை பிரதமரை சந்தித்தது போக, இப்போதும் இப்படி கோரிக்கை வைத்ததையே சொல்கிறார்.

ஜெயலலிதா காலத்திலிருந்து இன்றுவரை இவர்கள் வைத்த எந்த கோரிக்கைக்குமே மத்திய மோடி அரசு உடன்பட்டதில்லை என்பதுதான் வரலாறு.

காவிரி மேலாண்மை வாரியம், கச்சத்தீவு, மீனவர் பிரிட்ஜோ படுகொலை, நீட் நுழைவுத் தேர்வு மற்றும் இன்ன பிற எல்லாம் என்ன ஆயிற்று?

எல்லாம் எதிர்மறையாகவே ஆயிற்று. அதுமட்டுமல்ல. இப்படி எதிர்மறையானபோதிலும் அதற்கு தன் மவுனத்தால் சம்மதத்தைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு என்பதுதான் உண்மை.

நீட் தேர்வை விலக்க, தமிழக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. அதற்கு ஒப்புதல் பெற குடியரசுத்தலைவருக்கே அதை அனுப்பாமல் விட்டதே மோடி அரசு? அதற்கு எதிர்வினாயாற்றத் துப்பில்லாமல் போய், இப்போதும் நீட் தேர்வை விலக்கக் கோரினேன் என்கிறாரே எடப்பாடி எந்த உறுத்தலும் இன்றி?

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் போராடிய மக்களிடம், “அந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதியளித்து போராட்டத்தை கைவிடச் சொன்னார். அந்த மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நாளே மத்திய அமைச்சர் அந்தத் திட்டத்திற்கு ஒப்புதலளித்து கையெழுத்திட்டார். அது முதல் இன்று வரை 43 நாட்களாக நெடுவாசல் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களை இதுவரை எடப்பாடி சந்தித்ததுண்டா? பிரதமரை இப்போதும் சந்தித்தபோதுகூட அதைப் பற்றிப் பேசவில்லையே அவர்?

இந்த நிலையில், பிரதமரை சந்தித்தேன், பிரச்சனைகளைப் பேசினேன் என்று ஒரு தடவை அல்ல, மூன்றாவது தடவையாக வந்து அவர் சொல்வதைப் பொருட்படுத்தவே தயாரில்லை தமிழக மக்கள்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து முதல்வர் சொல்வதை தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் ஏற்கத் தயாரிவில்லை.

“பிரதமரிடம் பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரினேன்” என்பதன் மூலம் தமிழக மக்களை அவர் தொடர்ந்து ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றே சொல்லிக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.