May 16

காங்., உடன் தான் கூட்டணி: குமாரசாமி உறுதி

காங்கிரசுடன் தான் கூட்டணி என ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். இதனை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.,104 இடங்களை வென்றுள்ள போதிலும் ஆட்சியமைக்க இன்னும் 8 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க முயற்சி செய்து வருகிறது

இது தொடர்பாக குமாரசாமி கூறியதாவது: காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்துவிட்டோம். இதனடிப்படையில், எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கு இடமில்லை என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், எம்எல்ஏக்கள் மீது மத சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு முழு நம்பிக்கை உள்ளது. யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். பா.ஜ., என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கட்டும் என்றார்.

மதசார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சரவணா கூறுகையில், எங்கள் எம்எல்ஏக்களை பா.ஜ.,வினர் தொடர்பு கொள்ள முயல்கின்றனர். இதற்காக என்ன விலை கொடுக்கின்றனர் என்பது தெரியாது.

ஆனால், எங்கள் கட்சியினர் அதனை ஏற்கவில்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். யாரும் உடைக்க முடியாது. எம்எல்ஏக்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாக உள்ளனர் என்றார்.