May 25

பயங்கரவாத தாக்குதல் அறிகுறி : பிரிட்டனில் ராணுவம் குவிப்பு

பிரிட்டனின், மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, லண்டன் நகரில், இதுவரை இல்லாத வகையில், ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் மான்செஸ்டரில், பாப் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில், நேற்று முன்தினம், திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில், 

22 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இதையடுத்து, அடுத்தடுத்து தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

இது குறித்து, அந்நாட்டு பிரதமர் தெரசா மே கூறியதாவது:பிரிட்டனில், சமீபத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலால், மக்கள் பீதியடைந்து உள்ளனர். பயங்கரவாதிகள் எந்த நேரத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமை. நாடு முழுவதும், முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து, பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மான்செஸ்டர் நகரில், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மற்றொரு தாக்குதல் நடக்கும் முன், அதை முறியடிக்கும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 

இவ்வாறு அவர் கூறினார்.

தனி ஆள் அல்ல! : பிரிட்டனின் மான்செஸ்டரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில், ஆப்ரிக்க நாடான, லிபியா வம்சாவளியைச் சேர்ந்தவனும், பிரிட்டனில் வசிப்பவனுமான, சல்மான் அபேடி என்பவன், முக்கிய பங்காற்றியது தெரிய வந்துள்ளது. இது குறித்து, பிரிட்டன் அரசின் சார்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:மான்செஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், தனிநபருக்கு மட்டுமே தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியில், ஒரு கும்பலே செயல்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலுக்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். ஒரு குழுவாக செயல்பட்டு, திட்டமிட்டே இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளது. தாக்குதலின் பின்னணியில் யார் யார் செயல்பட்டனர் என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.