May 15

ஈழத்துக் கவிஞர் கண்டாவளைக் கவிராயரது இலக்கியப் பணி! இன்று அரது 90 வது பிறந்தநாள்.

ஈழத்தில் மரபுக் கவிதை படைப்பதில் வல்லவராக அறியப்பட்டு பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களாலேயே கவி உழவன் என அழைத்துச் சிறப்பிக்கப்பட்ட கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் இன்றைய தினம் (15.05.2018) தனது 90 வது வயதில் காலடியெடுத்து வைக்கின்றார். இவர் கிளிநொச்சி கண்டாவளையிலுள்ள முரசுமோட்டை கிராமத்தில் வசித்து வருகின்றார்.

'சங்க காலத்தில் வாழ்ந்த புலவர் வரிசையில் வைத்து எண்ணத் தகுந்த, கவித்துறை கைவரப் பெற்ற ஒருவர் இலைமறை காயாக எம்மிடையே இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றாரெனில், இலக்கியச் செம்மல்களுக்கும் கவிஞர்களுக்கும் ஆச்சரியம் தரும் காரணம் அவர் தன்னை இனங்காட்டிக்கொள்ளாது வன்னி மண்ணில் கண்ணியமாக இருப்பதாகும்.' என 2000 ஆம் ஆண்டு கவிஞர் கண்டாவளைக் கவிராயருக்கு சாகித்திய மண்டல இலக்கிய விருது வழங்க்பட்டபோது குறிப்பிட்டுச் சிறப்பிக்கப்பட்ட விடயமாகும். 

ஈமத்துத் தமிழ் இலக்கிய உலகில் மரபுக் கவிதை படைப்பவர்களாக விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே தற்காலத்தில் காணப்படுகின்றனர். அதிலும் தற்காலத்தில் வசிக்கின்ற ஒரு மூத்த மரபுக் கவிஞராக கண்டாவளைக் கவிராயர் காணப்படுகின்றார்.

கவிதைக்குரிய இலக்கண விதிமுறைகளைக் கருத்திற்கொண்டு அதிலிருந்து சற்றும் விலகாது படைக்கப்படுவது மரபுக் கவிதைகளாகும். கவிதைக்கென வகுக்கப்பட்ட இலக்கண விதிமுறைகளைக் கடந்து உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அமைந்து காணப்படுவது நவீன கவிதையாகக் கொள்ளப்படுகின்றது. மகாகவி பாரதியினுடைய நவீன கவிதை யுகத்தினைத் தொடர்ந்து மரபுக் கவிதைகளின் காலம் நிறைவுக்கு வந்துள்ளதாகவே கூறப்படுகின்றது.

ஆனாலும் தமிழ் இலக்கிய உலகில் மரபுக்க கவிதை படைப்பவர்களாகப் பலர் வலம் வந்துள்ளார்கள். அந்த வகையில் ஈழத்தின் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தின் முரசுமோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சித்தர் குமாரவேலு இராசையா என்னும் இயற் பெயர் கொண்ட கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் பல சிறந்த கவிதைகளைப் படைத்து பாராட்டுப் பெற்று அறியப்பட்ட கவிஞராக வலம் வருகின்றார்.

இவர் 1928 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி சித்தர் குமாரவேலு, குமாரவேலு சின்னப்பிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை கிளி.கண்டாவளை அ.த.க.பாடசாலையிலும் அதன் பின்னர் யாழ்.வரணி மகாவித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து ஆங்கில மொழிக் கல்வியை யாழ்.கரவெட்டி திரு.இருதயக் கல்லூரியிலும் கற்று பின்னர் யாழ்.சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் கற்று கல்விப் பொதுத்தராதரப் பத்திர சிரேஸ்ட பரீட்சையில் சித்தியடைந்தார்.

இவர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாசாவிருத்திச் சபையினர் நடத்திய பால பண்டிதர், பண்டிதர் வகுப்புக்களிலும் பயின்று சித்தியெய்தியுள்ளார். 1952 இல் பாடசாலைப் படிப்பை முடித்து வீடுதிரும்பிய இவர் தந்தையாருடன் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த வேளை 1956 இல் கிளிநொச்சியில் கிராம சேவையாளராக அரச நியமனம் பெற்று கிளிநொச்சியின் பல கிராமங்களிலும் 30 வருட காலமாகச் சேவையாற்றி 1986 இல் அப்போது இராணுவ உயரதிகாரியாகவிருந்த கொப்பேக்கடுவாவுடன் ஏற்றபட்ட கருத்து முரண்பாடு காரணமாக ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்கள் முந்தியே ஓய்வு பெற்றார்.

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த இவர் பண்டிதமணி அவர்களின் பிறந்தநாள்  வாழ்த்துப் பாவாக வாழ்க பண்டிதமணி என்னும் தலைப்பில்,

'பிறந்தவர் யாவரும் உலகினிற்

    பிறந்த சீர்திப் பேர்களோ

சிறந்தவர் யாவரும் மாந்தரில்

    சிறந்த இலக்கிய வான்களோ

திறந்தரு தமிழ்சொல் வுன்நிகர்

    தெளிந்தவர் தேடவு மாகுமோ

அறந்தரு நூல்பல ஆய்வினாய்

    அத்வித முரைசெயும் ஐயனே!

கற்றவர் கல்விக் குரைகல்நீ

    கற்றவர்க் குரையா ணியெனவே

கொற்றவ ருமுனை மிகமதித்தே

    கொடுத்தனர் கலாநிதிப் பட்டமும்

பற்பல ரும்போற் றும்பண்டித

     மாமணி யேநீ பல்லாண்டு

நற்றமிழ் வளர்த்து நம்மிடை

    நலமுடன் வாழிய வாழியவே!'

என வாழ்த்திப் பாடியுள்ளார்.

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் காலமான போது கற்சிலையாமெனக் கலங்கி நின்றனளே என்னும் தலைப்பில்

'முற்றிய ஞானியாம் முத்தமிழ் ஓதுநம்

நற்றமிழ் வல்லுனன் பண்டித மாமணி

பற்றினன் சிவபத மென்னலும் தமிழன்னை

கற்சிலை யாமெனக் கலங்கி நின்றளே!

கல்வியின் வரம்பினைக் கண்டபே ரறிஞனாய்த்

தொல்லியல் நூல்களைச் சுவைபட விளக்குனன்

பல்கலை ஞானியாம் பண்டித மாமணி

இல்லையெ னில்த்தமிழ் என்னிலை யாகுமோ?

என இரங்கி ஏக்கத்துடன் பாடியுள்ளார்.'

உண்மை நெறி வழி தவறாது நடக்கும் இலட்சியம் கொண்ட கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் ஒரு சிறந்த இறைபக்தர். 

இவர் 1953 ஆம் ஆண்டு ஐக்கிய தீபம் என்னும் பத்திரிகையில் தனது முதல் கவிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் போன்ற பல ஆக்கங்களை இவர் எழுயுள்ளார். 

இவரது ஆக்கங்கள் ஐக்கிய தீபம், ஈழநாடு, சைவநீதி, தினக்குரல், வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் பல சஞ்சிகைகளிலும் பிரசுரமாகி வெளிவந்துள்ளன.

கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் தனிப் பாடல்கள், பதிகங்கள், திருப்பள்ளி எழுச்சி, திருவூஞ்சல்கள், ஊழறு பதிகங்கள், விலையறு பதிகங்கள் என நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இலங்கை, இந்திய தலயாத்திரைகளை மேற்கொண்டு தலங்களைத் தரிசித்துப் பாடிய பாடல்கள் கோபுர வாயில் என்னும் தொகுப்பாக நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்நூலை இலங்கையின் இந்து கலாசார பிரிவு சிறந்த சமய நூலென பரிசு வழங்கிக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

கவிஞர் கண்டாவளைக் கவிராயரது கந்தகோட்ட மான்மியம் எனும் காவியம் 180 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு 2000 ஆம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டல விருதும் பணப் பரிசும் கிடைத்தது. மேலும் இவர் 1987 இல் கரைச்சிப்பள்ளு என்னும் நூலினையும் வெளியிட்டுப் பாராட்டினைப் பெற்றிருந்தார். மேலும் இவரது 30 இற்கு மேற்பட்ட பக்திப் பாடல்கள் நூலாக வெளிவந்துள்ளன.

இவரது கவிதைகளின் சிறப்புக் காரணமாக பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் இவரைக் கவி உழவன் எனப் பாராட்டிச் சிறப்பித்துள்ளார். மேலும் கண்டாவளைக் கவிராயரது பாடசாலைத் தமிழ் ஆசிரியரான கலாநிதி பண்டிதர்  க.சச்சிதானந்தன் அவர்கள் இவரை தெய்வீக வரகவி எனச் சிறப்பித்து ஆசியுரை வழங்கியுள்ளார்.

இவர் என் தாய் நாடே என்னும் தலைப்பில் எமது ஈழநாட்டின் சிறப்பினை பின்வருமாறு கவி வடித்துள்ளார்,

'என்தாய்நாடே! இன்தமிழ் ஈழமே!!

செந்நெல்விளையும் சீர்மிகு வளத்தின்

தென்னையும் வாழையும் தேன்கனிச் சோலையும்

பன்வகைப் பயன்தரு பனைமரத்தோப்பும்

காணிடைத் தேன்கனி கடலிடை மீனட்டை

வானக மெனவுயர் வளங்கொழி சிறப்பினை

முத்து ரத்தினம் மூங்கி காரியம்

நத்து மாணிக்கம் நயம்தரு வளத்தினை 

காடுகள் ஓடைகள் களனிகள் ஆறுகள்

பாடுமீன் பொய்கைநீர் பாய்குளங் களுடைய நீ!

உலகினைக் கவரும் ஒப்பிலாக் காட்சியும்

பலவகைப் புள்ளினம் பதியும் எழிலினை

இரப்போர் தமக்கும் இலகுவில் கிடைக்கும்

தரமிகு தண்ணீர் தரைவழி சுரப்பை நீ!

வெப்பமூட்டி வேண்டும் செல்வம் 

உப்பு விளைத்தே உதவும் திறத்தினை

உழலர் தேவைக்குதவும் மழையும்

வழமை மாறா வழங்கு தென்றலும்

காலத்திற்கேற்ற வெப்பமும் குளிரும்

சாலத் தந்தே தாங்கும் தரத்தினை

கைத்தொழில் செய்யும் காட்டுப் புற்கள்

மெத்தை கயிறு மேசை கதவுகள்

வீடு அமைக்க வேண்டு சீமெந்தும்

ஓடு செய் மண்ணும்

ஒருங்கே அமைந்த நீ!

செந்தமிழ் வளர்க்கும் தேர்ந்த புலவர்கள்

வந்து தோன்றும் வளம்மிகு ஈழமே!

என்ன இல்லை உன்பால்?

அன்னைக் கொப்பாய் அணைத்தாள் வாயே!'

இவர் தனது கவிதைகளில் பொருத்தமான இடங்களில் உவமை அணிக, உருவக அணி, தற்குறிப்பேற்ற அணி, உயர்வு நவிற்சி அணி, சொல்லலங்காரம், பின்வருநிலை சிலேடை, எதுகை, மோனை போன்ற அணிகளை மிகவும் திறம்படக் கையாண்டுள்ளமை இவரது கவிதைகளை கூர்ந்து நோக்கும் போது அதனது சுவையை அறிய முடிகின்றது. பள்ளு, மான்மியம், பதிகம், ஊஞ்சல் முதலிய வடிவங்களில் இவர் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இவரது ஆக்கங்களில் சிறந்த கற்பனைகள், வர்ணனைத்திறன், அக்கால, சமகால உணர்வு வெளிப்பாடு, பேச்சோசை, ஒப்பிட்டுரைகள், சந்தம், கிராமிய இயற்கையோடு ஒட்டிய தன்மைகள், சமூகப் பண்பாட்டம்சங்கள், ஈழத் தமிழரின் அரசியல்பிரச்சினைகள், சமகால பிரச்சினைகள் போன்றவற்றையும் சிறப்பாக அவதானிக்க முடிகின்றது.

கவிஞர் கண்டாவளைக் கவிராயரது நூல்கள் சிலவற்றை டில்லியிலுள்ள ஐக்கிய நாடுகள் நூலகக் காங்கிரஸ் சபை இலங்கையிலிருந்து பெற்று தனது நூலகத்தில் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது இலக்கிய படைப்புச் சேவையைப் பாராட்டி 1986 ஆம் ஆண்டு தேசிய விருதும் கவிமணி பட்டமும் 2000 ஆம் ஆண்டு கோபுரவாயில் என்னும் பக்தி இலக்கியத்திற்கு பாராட்டுப் பத்திரமும் பணப்பரிசும், மேலும் 2000 ஆம் ஆண்டு இவரது கந்தகோட்ட மான்மியம் எனும் நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டல விருதும் பணப்பரிசும், 2002 ஆம் ஆண்டு கலாசார சமய விவகார அலுவல்கள் திணைக்களத்தால் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி இவருக்கு கலாபூஷண விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தார். 2007 ஆம் ஆண்டு வவுனியா இலக்கிய வட்டத்தினர் இவருக்கு இலக்கியச் செல்வர் என்ற விருதும் வழங்கிக் கௌரவித்திருந்தனர். 

கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்களால் எழுதப்பட்ட கோபுர வாயில், கரைச்சிப் பள்ளு, அனுகூல பதிகம், கோணகுள விநாயகர் மாலை, இரணைமடுப் பதிகம், கிளிநொச்சி முருகன் திருவூஞ்சல், முரசுமோட்டை முருகன் திருவூஞ்சல் போன்ற 23 நூல்கள் இதுவரை அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. இதைவிட நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் வெளியிடப்படாது எழுத்துப் பிரதிகளாக இவரிடம் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரது படைப்புக்களை மையமாக வைத்து கண்டாவளைக் கவிராயர் ஓர் ஆய்வு என்னும் தலைப்பின் கீழ் 2014 ஆம் ஆண்டு திரு சி.இளந்திரையன் அவர்களும் கண்டாவளைக் கவிராயரின் கரைச்சிப்பள்ளு ஓர் ஆய்வு என்னும் தலைப்பின் கீழ் 2017 ஆம் ஆண்டு திருமதி பேபி சுதாகரன் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தில் தமிழ் முதுகலைமாணி கற்கை நெறிக்காக தமது ஆய்வுகளைச் சமர்ப்பித்திருந்தார்கள். இப்படியாக இவரது படைப்புக்கள் உயர் பட்டப்படிப்புக்களைத் தொர்பவர்களாலும் ஏனைய இலக்கியவாதிகளாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிளிநொச்சி முரசுமோட்டையில் சீரும் சிறப்புமாக வசித்து வந்த கண்டாவளைக் கவிராயர் அவர்கள் 2009 இல் நடைபெற்ற தமிழின அழிப்பு யுத்தத்தில் அகப்பட்டு முள்ளிவாய்க்கால் வரை அவலத்தைச் சுமந்து தனது இலக்கியப் படைப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து மீள்குடியேற்றத்தின் பின்னரே தனது நூல்கள் பலவற்றைத் தேடிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை காலத்தில் தோன்றி அவரது ஆசிகளுடன் தமிழில் கவிதைகள் உள்ளிட்ட பல ஆக்கங்களைப் படைத்துள்ள கவிஞர் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் தற்காலத்தில் 90 வயதில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவராவார். இவரது ஏனைய ஆக்கங்களையும் ஆராய்து தொகுத்து நூலுருவாக்கம் செய்து உரியவர்களது அங்கிகாரத்துடன் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது தமிழார்வலர்களது கோரிக்கையாகவுள்ளது.

தமிழ் இலக்கிய உலகில் உலா வந்த இலக்கிய கர்த்தாக்களைக் நினைவுகூர்ந்து கௌரவிக்கப்பட வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. ஆனாலும் சூழ்நிலை சந்தர்ப்பம் போன்ற பல காரணங்களால் அவர்கள் இவ்வுலகில் வாழ்கின்ற போதே அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனினும் ஈழத்துக் கவிஞராகிய கலாபூசணம் கண்டாவளைக் கவிராயர் அவர்கள் 15.05.2018 இன்றைய தினம் தனது 90 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ் வேளையில் அவரைக் கௌரவிக்கும் முகமாக இக்கட்டுரை வெளியிடப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

-சி.சிவேந்திரன்-