May 24

பாப்பரசர் பிரான்சிஸை வத்திக்கானில் சந்தித்தார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் தனது கருத்துக்களை கடுமையாக விமர்சித்திருந்த பாப்பரசர் பிரான்சிஸை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வத்திக்கானில் சந்தித்துள்ளார்.

ட்ரம்ப், உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதத் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டுவருகின்ற நிலையில், இன்று (புதன்கிழமை) வத்திகானில் பாப்பரசரின் வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் ட்ரம்ப், சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தததுடன், ஜெருசலேமில் புனித தலங்களையும் பார்வையிட்டிருந்தார்.

சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மதத் தலைவர்களுடனான சந்திப்பு சுமூகமாகவும் நட்பு ரீதியாகவும் அமைந்திருந்த நிலையில், பாப்பரசருடனான சந்திப்பு சற்று சவாலானதாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைப்பது தொடர்பிலான ட்ரம்பின் தீர்மானத்திற்கு பாப்பரசர் கடந்த ஆண்டு கடும் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், உறவுப் பாலத்தை வலுப்படுத்துவதற்கு மாறாக தடுப்புச் சுவர் அமைக்க நினைக்கும் நபர் ஒரு சிறந்த கிறிஸ்தவராக இருக்க முடியாது என பாப்பரசர் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.