May 11

ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்று மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பாரா? அல்லது தொடர்ந்து வழமைபோல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவாரா?

1987 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்களுக்கு இனிப்பூட்டும் ஆண்டாக இருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் புற்றுநோய் புகுந்த ஆண்டாகவே பார்க்கப்பட்டது.

இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கை அரசியலில் கால்பதித்தது. அத்துடன் வடக்கு - கிழக்கு மாகாணசபையினை நிறுவி தமிழர்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்கு வழிவகுத்தது.

ஆனால் அன்று வடக்கு - கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றியவர்கள் எப்படியெல்லாம் ஆட்சி நடத்தக் கூடாதோ அப்படியெல்லாம் ஆட்சி நடத்தி ஊழல் திலகங்களாக திகழ்ந்தார்கள். அந்த நடைமுறை இன்றும் வடக்கு மாகாணசபையில் தொடர்கின்றது.

பிழையான நடைமுறைகளுக்கு தமிழ் தரப்பு காரணமாகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சட்டத்திற்கு முரணானது என்பதனை அந்த அமைப்பிலுள்ள சட்டவல்லுனர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது தேர்தல் திணைக்களத்தில் பதியப்பட்ட அமைப்பா? இதனுடைய சின்னம் வீடா? இந்த அமைப்பிற்கு தலைவர் செயலாளர் சார்ந்த கட்டமைப்பு இருக்கின்றதா? இதனை தேர்தல்களின் போது பயன்படுத்தலாமா? என்ற வினாக்களுக்கு ஒரே ஒரு விடைதான் இருக்கின்றது. அதுதான் "இல்லை' என்பதாகும்.ஒரு பிழையான கட்டமைப்பைக்கொண்டு இலங்கையிலே தமிழர் பிரதிநிதிகளாக வலம்வருபவர்கள் இலகுவாக ஊழலாட்சி நடத்துவார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் கிடையாது.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபையை கைப்பற்றியவர்கள் ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்பதுபோல அமைச்சர்களை நியமிப்பதிலேயே தங்களுடைய குத்துவெட்டுக்களை காட்டினார்கள்.

கோடிக்கணக்கான நிதியினை தங்களுடைய சுயலாபத்திற்காக செலவழித்தார்கள். மீதியை செலவழிக்காமல் ஒழித்தார்கள். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூடச் செய்யமுடியாமல் மத்திய அரசின் மீது குறைகூறிக்கொண்டே காலத்தை கழித்துவிட்டார்கள்.

ஊழல் குற்றம் சாட்டப்பட்டு அமைச்சரவை கலைக்கப்பட்டது. ஆனால் சட்டத்திற்கு முரணாக முதலமைச்சர் மட்டும் இன்றும் தொடர்கின்றார்.

மாகாண அமைச்சரவையின் தலைவராக முதலமைச்சரே இருக்கின்றார். நான்கு அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களை பதவி விலக்கும் போது முதலமைச்சரும் தானாகவே பதவி விலகியிருக்கவேண்டும். ஆனால் அப்படிச் செய்யவில்லை.

வடக்கு மாகாணசபையை வழிநடத்துகின்ற வடக்கு மாகாணசபை பேரவை கூட இது தொடர்பான எந்தவிதமான கவனயீர்ப்பு தீர்மானங் கூட கொண்டுவரவில்லை. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் வெற்றிபெற்ற 30 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த ஊழல் ஆட்சியைப்பற்றி பேரவையில் பேசவில்லை. ஏனெனில் இந்த ஊழல் ஆட்சியைக் கொண்டுவந்ததே அவர்கள் சார்ந்த தமிழரக்கட்சி என்பது அவர்களது மனச்சாட்சிக்குத் தெரியும்.

இன்று வடக்கு மாகாணசபைக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கின்றது. அந்த ஊழல் அறிக்கை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அன்று தன்னிச்சையாக அமைச்சரவையை மாற்றியமைத்த முதலமைச்சர் இன்று ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்று மீண்டும் அமைச்சரவையை மாற்றியமைப்பாரா? அல்லது தொடர்ந்து வழமைபோல ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் கூடிய வடக்கு மாகாணசபையை கொண்டு நடத்துவாரா?

இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் இப்படியான ஊழல் செயற்பாடுகள் நடைபெறத்தான் செய்கின்றன. ஆனால் அங்கே சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படுகின்றது.

தென்மாகாணசபை முதலமைச்சர் பதவி நீக்கப்பட்டதை நல்ல உதாரணமாக கூறலாம்.

தமிரசுக்கட்சி வசம் வழங்கப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபைக்கு என்ன நடந்தது? வலி கிழக்கு பிரதேச சபைக்கு என்ன நடந்தது என கடந்தகால வரலாறுகள் கூறும்.

இன்று பெருவாரியான பிரதேச சபைகளில் மைனாரிற்றி ஆட்சி நடத்துகின்ற தமிழரசுக் கட்சி  முதலாவது இரண்டாவது கூட்டங்களிலேயே தனது திருவிளையாடல்களை தொடங்கியுள்ளது.

இதற்கு யாழ் மாநகரசபைமுதல்வருக்கெதிராக கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானம் நல்ல உதாரணம்.

ஊழலுக்கு எதிராக தமிழ் காங்கிரசும் ஈ.பி.டி.பியும் இணைகின்ற போது தமிழரசுக் கட்சியினுடைய மைனாரிற்றி ஆட்சி காணாமல் போகும் என்பது வெளிப்படை உண்மை.

தமிழரசுக் கட்சியின் இந்தப் பின்னடைவுக்கு என்ன காரணம்? என்பதனை மூத்த தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.

எதிரணியினரை மமதையுடன் வெளிப்படையாக சீண்டிப்பார்க்கின்ற அரசியலை தமிழரசுக்கட்சியினுடைய முக்கியஸ்தர்கள் மேற்கொள்கின்றார்கள். மேலும் தமிழரசுக் கட்சிக்குள் இருந்துகொண்டே மற்றைய கட்சிகளாகிய ரெலோ புளொட் ஆகியன தங்களது வாக்கு வங்கியை வளர்ப்பதற்கு முயற்சி செய்கின்றன.

தமிழரசுக்கட்சியினுடைய உறுப்பினர்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமிழ் காங்கிரசுக்கும் தமிழ் பேரவைக்கும் உள்ளடி வேலை செய்கிறார்கள்.

பெரிய கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி இன்று தனது இருப்பை இழந்து ஒரு சிறு கட்சியாக மாறிவிட்டது. கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலே தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை மூன்றாகப் பிரிக்க வேண்டும்.

அப்படிப்பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகள் மிகவும் சொற்பம். உள்ளூராட்சி சபை தேர்தலிலே தமிழரசுக்கட்சி விழுக்காட்டை சந்தித்துள்ளது என்பதை சகலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வென்றாலும் தோற்ற நிலையில்தான் தமிழரசுக்கட்சி இருக்கின்றது. இதேவேளை எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் தமிழரசுக்கட்சியினுடைய வரலாற்றில் பேரிடியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்திற்கிடமில்லை.

ஏனெனில் வளர்த்த கடா மார்பில் பாய்வதைப்போல தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தற்போதைய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனித்துப் போட்டியிடுகின்றார். இதேவேளை அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு தமிழரசுக்கட்சியில் வேட்பாளர்கள் இருக்கின்றார்களா? ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு தமிழரசுக்கட்சி வாய்ப்புக் கொடுக்குமா? இதேவேளை வெற்றிக் கூட்டணியில் மட்டுமே இணைய விரும்புகின்ற ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் முதலமைச்சர் பக்கம் தாவுவதற்கு தயாராக இருக்கின்றார்கள்.

இந்தியாவினுடைய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதி தீவிர தமிழ்த் தேசிய வாதக்கட்சியாகிய தமிழ் காங்கிரசுடன் கூட்டுவைக்கமாட்டார். அத்துடன் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு அணியுடனும் கூட்டுச் சேரமாட்டார்.

இன்று அவருக்கு வெற்றி வாகை சூடஇருக்கின்ற காரணிகளாக தமிழரசுக்கட்சியினுடைய தற்போதைய  மமதைப்போக்கு அந்தக் கட்சிக்குள்ளேயே இருந்து அந்தக்கட்சியை அழிக்கின்ற சிறு கட்சிகளாகிய ரெலோ புளொட் ஆகிய கட்சிகள் மற்றும் ஈ.பி.டி.பியினுடைய தனித்துப் போட்டியிடுகின்ற நிலைப்பாடு.

எது எப்படி இருப்பினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கு மாகாணசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாது. அவர் தேர்தலின் பின்பு கூட்டாட்சியை நோக்கிப் போகின்றபோது ஒருபோதும் தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்கமாட்டார்.

இதர கட்சிகளுடன் சேர்ந்து வடக்கு மாகாண சபை முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக காணப்படுகின்றது.

இதனைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால் தமிழரசுக்கட்சி ரெலோ புளொட் ஆகியவற்றை கழற்றிவிட்டு தனித்துப் போட்டியிட வேண்டும்.

தமிழரசுக்கட்சி அந்த முடிவினை உடனடியாகவே எடுக்க வேண்டும். அப்படி செய்யுமா? செய்தால் மட்டுமே தமிழரசுக்கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.


எல்லாளன்