May 24

ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்

ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் கொரிய மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

நெல்லை மாவட்டம், வி.கே.புதூரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் கருவூல அலுவலகக் கட்டிடத்தை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்துவைத்தார்.

மேலும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டிலும், அரியலூர் மாவட்டம், செந்துறையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 சார் கருவூலஅலுவலக கட்டிடங்களையும், சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.21 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும், பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2 கோடியே 62 லட்சம் செலவில் 12,280 சதுர மீட்டர் பரப்பளவில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவு பூங்காவையும், சென்னை அரசு மைய அச்சகத்தில், ரூ.60 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள சிறப்பு புத்தகம் கட்டும் எந்திர சேவையையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.