May 02

பற்றி எரிந்த கடைகள்! கலவர பூமியாக மாறிய பிரான்ஸ்: 200 பேர் கைது!

பிரான்சில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியதால் இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அரசு முறைப் பயணமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இந்நிலையில் மேக்ரான் மீதான அதிருப்தியை வெளிகாட்ட Far-left anarchist குழுவினைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்டோர் திங்கட்கிழமை முகமூடியுடன் தலைநகர் பாரீசில் போராட்டம் நடத்தினர்.

அதாவது மேக்ரான் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிலாளர் ஒழுங்குமுறை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

 இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடைகளின் ஜன்னல்களை உடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கிருந்த மெக்டோனால்ட்ஸ் உணவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் அந்த கடை முற்றிலும் நாசமாகியுள்ளது. அருகிலிருந்த கடைகளிலும் தீ பரவியுள்ளது.

இதைத் தொடர்ந்து சாலையில் இருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதும் தீ பரவியதால், பொலிசார் போராட்டக்காரர்களை கலைப்பதற்கு கண்ணீர் புகைகுண்டு வீசியுள்ளனர்.

அப்போது பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 200 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிசார் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.