May 23

மூளையை குண்டு துளைத்தும் உயிர் பிழைத்த அதிசய மனிதர்

மூளையை துப்பாக்கி குண்டு துளைத்து பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகும் 24 வயது இளைஞர் உயிர் பிழைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 2ஆம் தேதி சஞ்சய்(24), என்பவர் இருவருக்கு இடையேயான சண்டையை தடுக்க முயன்றபோது நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கி குண்டு சஞ்சயின் மூளையை துளைத்ததில் அவரது இடப்பக்க மூளை கடுமையாக சேதமடைந்தது.

இச்சமபவத்தையடுத்து உடனடியாக ரூபி ஹால் கிளினிக்கில் சஞ்சய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சஞ்சயை பரிசோதித்த மருத்துவர்கள், இது மிகவும் சிக்கலான சிகிச்சை. சஞ்சயின் மூளையில் துப்பாக்கி குண்டு ஆழமாக இருப்பதாகவும், ரத்தக் கசிவு அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். எனினும், அதிர்ஷ்டவசமாக சஞ்சய் பிழைத்தது அதிசயம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

சஞ்சயின் இடப்பக்க மூளையில் மண்டை ஓட்டை நோக்கி சுமார் 10செ.மீ வரை ஆழமாக குண்டு பாய்ந்திருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து சிறுமூளையையும், பெருமூளையையும் இணைக்கும் பகுதியை நோக்கி சென்றதாகவும் சிகிச்சை மேற்கொண்ட மருத்தவர் காந்தி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மூளையில் இருந்த குண்டை அகற்றி சில அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு அவரை கண்காணிப்பில் வைத்தனர்.

அவரது கண் அசைவுகள்,நரம்பு செய்லபாடுகளை கவனிக்க சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. சஞ்சய் தாமாக சுவாசிக்க தொடங்கியதையடுத்து, கடந்த மார்ச் 2ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், கடந்த மே 17ஆம் தேதி திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டு சஞ்சீவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை நடத்தியபோது, சில ரத்த நாளங்கள் சஞ்சயின் இடப்பக்க மூளை வலப்பக்கம் இழுக்கப்படுவதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்து அதனை குணப்படுத்தினர்.

தற்போது சஞ்சய் ஆரோக்கியாமாக இருப்பதாக அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவருக்கு தலைவலி, வாந்தி, காய்ச்சல் வராமல் பார்த்துக்கொள்ளும்படி நரம்புகள் நல மருத்துவர்கள் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.