May 23

ஆப்பிள் ஐபோன் 8: அதிகம் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் - முழு தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், ஐபோன் 8 இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. புதிய ஐபோன் சார்ந்து பல்வேறு தகவல்கள் புகைப்படம், வீடியோ வடிவில் அடிக்கடி வெளியாகி வருகிறது. 

ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் ஐபோன் 8 வெளியாக தயாராகி வருகிறது. பத்தாவது ஆண்டு விழாவில் இதுவரை வெளியானதை விட தலைசிறந்த ஸ்மார்ட்போனினை ஆப்பிள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஐபோன் 8-இல் வழங்கப்படவுள்ள சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.   

மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு:

ஆப்பிள் நிறுவன சாதனங்களில் வடிவமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். எனினும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் 7 வடிவமைப்பில் ஆப்பிள் அதிகளவு மாற்றங்களை செய்யவில்லை. இதுகுறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் ஐபோனின் பத்தாவது ஆண்டை சிறப்பிக்கும் மாடலில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படலாம் என்பதால் 2017 ஐபோனில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை என கூறப்பட்டது.  

இதனால் ஐபோன் 8-இல் 2.5D வளைந்த கிளாஸ் பேனல்கள் முன்பும், பின்பும் வழங்கப்பட்டு இடையே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்ட ஃபிரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ஐபோனில் ட்ரூ-டோன் OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.  மேம்படுத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு:

ஐபோன் 8-இல் டூயல் பிரைமரி கேமராவுடன் 2X ஆப்டிக்கல் சூம் மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டெலிபோட்டோ லென்ஸ் வசதியை மேம்படுத்தி டூயல் கேமராக்களிலும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் டெப்த் ஆஃப் ஃபீல்டு வசதிகள் முன்பக்க கேமராக்களிலும் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. 

மேலும் ஐபோன் 8 கேமராவுடன் 3D சென்சிங் வசதிகள் வழங்கப்படும் என்றும், ஐபோன் 8-இல் எல்.ஜி. நிறுவனத்தின் டூயல் லென்ஸ் கேமரா வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

ஹோம் பட்டன்:

இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோனில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் இதுவும் ஒன்று. ஐபோன் 8-இல் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படும் என கூறப்படுகின்றது. ஹோம் பட்டன் நீக்கப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், சில நாட்களுக்கு முன் வெளியான புகைப்படங்களில் ஹோம் பட்டன் வழங்கப்பட மாட்டாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.ஐரிஸ் ஸ்கேனர், மேம்படுத்தப்பட்ட 3D டச்:

சாம்சங் கேலக்ஸி S8 போன்றே, ஐபோன் 8 ஐரிஸ் ஸ்கேனர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியை கொண்டு போனினை கண்களை கொண்டு அன்லாக் செய்ய முடியும். 

கூடுதலாக புதிய ரக 3D டச் மாட்யூலினை ஐபோன் 8-இல் வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதில் கூடுதலாக கிராஃபைட் ஷீட் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. இதனால் அதிக சூடானாலும் சாதனம் சீராக இயங்க வழி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


வயர்லெஸ் சார்ஜிங்:

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வயர்லெஸ் சார்ஜிங் வசதியை ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோனில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவதை விட ஆப்பிளின் வயர்லெஸ் சார்ஜிங் வசதியானது சாதனத்தை 15 அடி தூரத்தில் இருந்தும் சார்ஜ் செய்யும் என கூறப்படுகின்றது. 

விலை:

ஆப்பிள் வரலாற்றிலேயே இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் 8 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என தொழில்நுட்ப சந்தை மற்றும் ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி ஐபோன் 8 துவக்க விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,690 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதில் வழங்கப்படவுள்ள அம்சங்கள் சார்ந்து இதுவரை வெளியாகியுள்ள தகவல்களை கொண்டு இந்த விலையை ஆப்பிள் நிர்ணயம் செய்யலாம் என கூறப்படுகின்றது.