May 23

மன்செஸ்டர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்; ஏம்பர் ரூட் கடும் கண்டனம்

மன்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஈவிரக்கம் அற்ற மிருகத்தனமான செயல் என பிரித்தானிய உள்துறை செயலாளர் ஏம்பர் ரூட் (Amber Rudd) தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) தொலைகாட்சி சேவையொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “நேற்று இரவு நடத்தப்பட்ட குறித்த தாக்குதல் தொடர்பில் சிலர் இன்று அதிகாலை அறிந்திருப்பர். இது ஒரு மிருகத்தனமான செயல். சமூகத்தில் உள்ள அப்பாவி மக்களை குறிவைத்தே இந்த தாக்குததல் நடத்தப்பட்டுள்ளது. இளவயதினர் மற்றும் சிறுவர்கள் என பலர் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தருணத்தில் நான் பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன், தக்க தருணத்தில் உதவி புரிந்த அவசரகால படையினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். குறித்த பகுதிக்கு நான் நேரில் விஜயம் மேற்கொண்டு பார்வையிடவுள்ளேன். இது போன்ற தாக்குதல்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

அத்துடன், நான் இரு முக்கிய விடயங்களை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். மன்சஸ்டரில் இதற்கு முன்பும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் அஞ்சவில்லை. தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இம்முறை ஒன்றுமறியாத மக்கள் தொகுதியை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மக்களை அச்சத்தில் உறைய வைப்பதும் அவர்களை பிரிப்பதுமே ஆகும். ஆனால் அவர்களது நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது” என தெரிவித்தார்.

இந்த தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார் இது ஒரு தீவிரவாதத் தாக்குதலாகவே இருக்கும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்துடன், குறித்த தாக்குதலை நடத்தியவரும் இந்த சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.