May 01

இன்னும் பல குத்துச் சண்டை வீரர்கள் தேவைப்படுகிறார்கள், அப்போதுதான் கூண்டோடு கயிலாசம் போக மெத்த வசதியாக இருக்கும்! நக்கீரன்

மாகாண சபை என்பது மாகாண மட்டத்தில் மக்களின் பொருளாதார, பண்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றி வைக்க உருவாக்கப்பட்ட நிருவாக இயந்திரமாகும்.  

உண்மையில் அது 13 ஏ பெற்றெடுத்த குழந்தையாகும். அதற்கு மருத்துவிச்சிகளாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒரு வர் இராசீவ் காந்தி. இன்னொருவர் ஜேஆர் ஜெயவர்த்தனா. ஆனால் ஒரு பத்தி எழுத்தாளர் மாகாண சபை என்பது குத்துச் சண்டை மேடையென்றும் அதற்குத் தேவைப்படுவது விக்னேஸவரன் என்ற குத்துச்சண்டை வீரனாம். நிலாந்தன் என்ற இந்த எழுத்தாளரும் அவரையொத்த எழுத்தாளர்களும் விக்னேஸ்வரன் என்ற குதிரைக்குக கொம்பு சீவிவிடுவதில்மெத்தப்பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்கி அதன் தலைமையை விக்னேஸ்வரனிடம் ஒப்படைப்பதே அவர்களது திட்டமாகும். அந்தப் பதவிக்கு  விக்னேஸ்வரன் தகுதியுடையவரா அல்லவா என்பது பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. காரணம் அவரைவிட சக்கட்டைகள்தான் அந்தப் பக்கம் இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் அரசியலி்ல் ஒரு பால்குடி என்ற தேர்தல் நேரத்தில் ஆனந்தசங்கரி அவரை வருணித்தார். உண்மையும் அதுதான்.

வட கிழக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இரண்டொரு சபைகளைத் தவிர ஏனைய சபைகள்  அறுதிப் பெரும்பான்மை அற்ற  தொங்கு சபைகளாகக் காணப்பட்டன. வடக்கில் மட்டுமல்ல  தெற்கிலும் இதே கதைதான். 340 சபைகளில் 180 க்கும் மேலான  சபைகள் தொங்கு சபைகளாகக் காட்சியளித்தன. 

இதனைக் கருத்தில் கொண்டு ததேகூ இன் பேச்சாளர் சுமந்திரன் ஒரு யோசனையை முன்வைத்தார்.  அறுதிப் பெரும்பான்மை இல்லாத தொங்கு சபைகளில் எந்தக் கட்சிக்கு அதிக இருக்கைகள் இருக்கிறதோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்க ஏனைய கட்சிகள் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் எல்லாச் சபைகளிலும் பிச்சல் புடுங்கல் இல்லாமல் ஒரு உறுதியான ஆட்சியை அமைக்க முடியும் என்றும் சொன்னார். மேலும் இதன் அடிப்படையில் சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை இரண்டிலும் அதிக இடங்களைக் கைப்பற்றிய தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்க ததேகூ ஆதரவு அளித்திருக்கும் என்பது வெள்ளிடை மலை.

ஆனால்,  

நுணலும் தன் வாயால் கெடும் என்பது போலஎப்போதும் எடுத்தேன்,  கவிழ்த்தேன் என யோசியாமல் பேசும் திருவாளர் கஜேந்திரகுமார் சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை இரண்டில் மட்டும் அல்ல யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டி பிரதேச சபை (வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை) போன்ற பிரதேச சபைகளிலும் சைக்கிள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார். அது மட்டுமல்ல, தேர்தல் இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை வைத்தார். அதற்கான காரணத்தையும் அவரே சொன்னார். அவரது ஆசையின் படி ஒரு இரகசிய தேர்தல் நடந்தால் ததேகூ இல் இருக்கும் உறுப்பினர்கள் பலர் தனது கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்றார். இது ஒரு மோசமான முன் எடுத்துக்காட்டு என்பது அவருக்கு விளங்கவில்லை! இந்த விளையாட்டை மற்றக் கட்சிகளும் செய்ய வெளிக்கிட்டார்கள்.

சுமந்திரனின் சமரச யோசனையை கஜேந்திரகுமார் அற்ப புத்தி காரணமாக நிராகரித்தார். அவர் சொன்னது போலவே யாழ்ப்பாண மாநகர சபை மேயர் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டுத் தோற்றுப் போனது. அவரது சைக்கிள் கட்சியில் போட்டியிட்டுத் தெரிவான 13 உறுப்பினர்களே அவர்களது மேயர் தேர்தல் வேட்பாளர் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இரண்டாவது சுற்றில் வாக்கெடுப்பு எடுக்க முன்னரே இபிடிபி சபையை விட்டு வெளியேறியது. இதனால் 18 வாக்குகள் பெற்ற ததேகூ இன் மேயர் வேட்பாளர் இமானுவேல் ஆர்னோல்ட் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதன் எதிரொலிதான் சைக்கிள் கட்சி சாவகச்சேரி நகர சபை மற்றும் பருத்தித்துறை நகர சபை இரண்டையும் பறிகொடுக்க நேரிட்டது.  பற்றைக்குள் இருந்த  ஒரு பெரிய பறவையைப் பிடிக்க எண்ணி கையில் இருந்த இரண்டு சின்னப் பறவைகளை கஜேந்திரகுமார்  பறக்க விட்டுவிட்டார். இப்போது சைக்கிள் கட்சி அணிலை ஏறவிட்ட நாய் போல நிற்கிறது. அரசி்யலில் வாய் வீரம் மட்டும் போதாது. சாணக்கியமும் தேவை. அது கஜேந்திரகுமாரிடம் அடியோடு இல்லை. அவரிடம் இருக்கும் இந்தப் பலவீனம் காரணமாகவே புலத்தில் உள்ள வன்னியின் மிச்சங்கள் ததேகூ எதிராக குத்துச் சண்டைக்காரன் விக்னேஸ்வரனுக்கு தலைப்பாக் கட்டி குத்துச் சண்டை  மேடையில் நிறுத்த நினைக்கிறார்கள். கஜேந்திரகுமார் நொண்டிக் குதிரை, விக்னேஸ்வரன் பஞ்ச கல்யாணிக் குதிரை என அவர்கள் நினைக்கிறார்கள்.

சும்மாவே ஆடுகிற பேய்க்குச்  சாம்பிராணிப் புகை காட்டினால் எப்படி ஆடும் என்பது தெரிந்ததே. அதனால்தான் மாற்று அணியை உருவாக்க அல்லும் பகலும் அனுவரதமும் பாடுபடும்  நிலாந்தன் தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் என எழுதுகிறார்.

விக்னேஸ்வரனின் சாதகத்தை சரியாகப் படிக்காத காரணத்தால்தான் சம்பந்தன் ஐயா  கொழும்பில் சித்தம் சிவன்பால் என்றிருந்த விக்னேஸ்வரனை வட  மாகாண அரசியலுக்கு இழுத்து வந்தார். முதலமைச்சர் ஆக முடிசூட்டியும் வைத்தார். இப்போது வளர்த்த கடா நெஞ்சில் பாய்கிறது!

நிலாந்தன் போன்றோர் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். ததேகூ க்கு இரண்டகம் செய்த ஒருவர்  அவரோடு கூட்டுச் சேரக் கங்கணம் கட்டி நிற்கும் கஜேந்திரகுமார், சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றோருக்கு இரண்டகம் செய்ய மாட்டார் என்பதற்கு எந்த உறுதிமொழியும் இல்லை.

வினைத்திறனற்ற முதலமைச்சர் என்ற பட்டத்தைச் சுமக்கும் விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சரானால் பிரதமரோடு சண்டைக்குப் போவார், சக அமைச்சர்களோடு முரண்பட்டு அவர்களை அகற்றிவிட்டு தனது சொல்லுக்குத் தாளம் போடுபவர்களை அமைச்சர்களாக நியமித்து அழகு பார்ப்பார்.  அனைத்துலக நிதி நிறுவனங்கள் வட மாகாண கமக்காரர்களுக்கு  உதவி நிதி கொடுக்க முன்வந்தால் முதலில் தனது மருமகன் நிர்மலனுக்கு மாதம் அ.டொலர் 5,000 (பிற சலுகைகள் தனி) சம்பளத்தில் வேலை போட்டுக் கொடுக்க வேண்டும் என்பார். கொடுக்காவிட்டால்  நிதியுதவியை உதறித்தள்ளி விடுவார்.

சுருக்கமாகச் சொன்னால் நிலாந்தன் எழுதியது போல  தமிழ் மக்களுக்கு தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன் மட்டுமல்ல. இன்னும் பல குத்துச் சண்டை வீரர்கள் தேவைப்படுகிறார்கள். அப்போதுதான் கூண் டோடு  கயிலாசம் போக மெத்த வசதியாக இருக்கும்!