May 23

அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனையால் வேதனையில் துடிக்கும் மக்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு கால சாதனையால் தமிழக மக்கள் வேதனையில் துடிப்பதாக தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள திறந்த மடலில் கூறியுள்ளதாவது:-

கண்டெய்னர் லாரிகளில் கொள்ளைப் பணமும், கவர் கவராக வீடுகள் தோறும் வழங்கப்பட்ட லஞ்சப் பணமும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்குப் ‘புலப்படாமல்’ போனதால் கடந்த ஓராண்டுக்கு முன் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது.

அப்படியும் கூட தி.மு.க.வின் வாக்குகளையும், பெருகி வந்த ஆதரவையும் ஆளுந்தரப்பின் அதிகாரக் கரங்களால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

அ.தி.மு.க.வினர் மீண்டும் பதவியேற்றுக் கொண்டு மே 22-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஒரு வருடத்தில் மூன்று முதல்-அமைச்சர்கள். ஒரு மாற்றம் இயற்கையாக ஏற்பட்டது என்றாலும், இரு முதல்வர்கள் மாற்றம் ‘அதிகாரவெறி’யால் ஏற்பட்ட மாற்றம்.

முக்கியத்துவம் வாய்ந்த அனைத்துத் துறைகளிலும் இந்திய அளவில் கடைசி இடம் என்பதும், முன்னிலை பெற்றிருந்த துறைகளிலும் இமாலய ஊழல் என்பதுமே இந்த ஆட்சியின் வேதனைமிகுந்த சாதனையாக இருக்கிறது. இது இந்த ஓராண்டு காலத்தில் நிகழ்ந்ததல்ல, ஜெயலலிதா ஆட்சி செய்த 5 ஆண்டுகளிலும் இதே அவல நிலைதான்.

ஆற்று மணலில் தொடங்கி தாது மணல், சவுடு மணல், கிரானைட் உள்பட அனைத்து கனிமவளங்களும் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாகத் தொடர்கொள்ளை அடிக்கப்படுவதை நீதிமன்றமே பல முறை சுட்டிக்காட்டியிருக்கிறது.

அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் இந்த ஆட்சியாளர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. புதிய தாதுமணல் கொள்கை வகுக்கப் போகிறோம் என்றவர்கள் இப்போது அதை வசதியாக மறந்துவிட்டு, தாது மணல் கொள்ளை குறித்த விசாரணை அறிக்கையையும் கிடப்பில் போட்டு விட்டார்கள்.

இயற்கை வளங்கள் கொள்ளை போனதால் விவசாயிகளின் வாழ்வு தரிசு நிலமாக மாறிவிட்டது. கடந்த 6 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனம் வெதும்பி, தற்கொலையாலும் அதிர்ச்சி மரணங்களாலும் உயிரிழந்திருக்கிறார்கள்.

அவர்களின் உயிரிழப்பை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் கூட கொச்சைப்படுத்திய இரக்கமற்ற ஆட்சியாளர்களால் தமிழ்நாடு ஹிட்லரி சத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

தி.மு.கழக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்காகத் தமிழகத்தில் காட்டப்பட்ட அக்கறையை நம்பி வரக்கூடிய ஒன்றிரண்டு வெளிநாட்டு நிறுவனங்களும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கேட்கும் லஞ்சத் தொகையைக் கண்டு மிரண்டு, அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் எடுக்கக்கூடிய மோசமான நிலையில்தான தமிழகம் இருக்கிறது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று புகழப்பட்ட தமிழகத்தில் தற்போது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களும் துணைவேந்தர்களின் கையெழுத்தின்றி நடைபெறக்கூடிய அவலத்தில் உள்ளது. மூன்று பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்கள் பதவி வருடக்கணக்கில் காலியாக இருக்கிறது. உயர் கல்வியிலிருந்து பள்ளிக்கல்வி வரை அனைத்திலும் ஊழல் முடைநாற்றம் வீசுகிறது.

ஆசிரியர் நியமனங்களில் லஞ்சம் விளையாடுகிறது. அரசுப் பணிகளுக்கான ஊழியர்களைத் தேர்வு செய்யும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கான உறுப்பினர்கள் நியமனத்திலேயே ஆளுங்கட்சி எந்தளவு நேர்மையற்ற முறையில் செயல்பட்டது என்பதை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் சுட்டிக்காட்டி அந்த நியமனங்களை ரத்து செய்திருப்பது இந்த ஆட்சியின் லட்சணத்தை எடுத்துக்காட்டும் சான்றிதழாகும்.கடந்த ஆறாண்டுகளாக தமிழகத்தில் வழிப்பறி தொடங்கி கொலை- கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்தபடியே உள்ளன.

காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து ஜனநாயக வழியில் போராடும் பெண்களையும் இளைஞர்களையும் கண் மூடித்தனமாகத் தாக்கி, கைது செய்யும் ஏவல்துறையாக மாறியுள்ளது. ஆறு வருடமாக மாலுமி இல்லாத கப்பலாக தமிழக காவல்துறை தரை தட்டி நிற்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாத காரணத்தினால், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. இந்நிலையில், அமைச்சர்களும் ஆளுங்கட்சியினரும் ஊழல் விளையாட்டில் புகுந்து போட்டிப்போட்டுக் கொண்டு விளையாடுவது குறித்து வெளிப்படையான புகார்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஊழலை ஓழிக்கும் ‘லோக் அயுக்தா’ அமைப்பைக் கொண்டு வர அஞ்சி நடுங்குகிறார்கள். வருமானவரித்துறையின் சோதனைக்குப் பதவியில் இருக்கும் அமைச்சர்களே ஆளாகின்றனர். அதைவிடக் கேவலமாக, தமிழகத்தின் தலைமைச் செயலகத்திலேயே துணை ராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

மாநில சுயாட்சிக் குரல் ஓங்கி ஒலித்த மண்ணில், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் உத்தரவுக்கேற்ப பொம்மைகளாக ஆடுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் மத்திய அரசுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள்.

மடியில் கனம் இருப்பதால் அவர்கள் மண்டியிட்டுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு தமிழக நலன்கள் பாதிக்கப்படுகிறது. வெள்ளம், வார்தா புயல், வறட்சி என எதற்கும் மத்திய அரசிடம் கேட்ட நிதியைப் பெற முடியாத கையாலாகாத ஆட்சி ஒரு ‘காட்சிப் பொருளாகவே’ இருக்கிறது.

ஊழல் நாற்றம் வீசும் செயலற்ற சரணாகதி அரசின் பிடியில் தமிழகம் இன்னும் எத்தனை காலம் நீடிக்கப்போகிறது என்கிற கேள்வி ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் ஒலிக்கிறது. ஓராண்டுக்கு முன் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களும் கூட, தமிழகத்தில் எப்போது ஆட்சிமாற்றம் வரும் என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் படும் இன்னல்களை நீக்க மனச்சாட்சி இல்லாமல் இருக்கிறது அ.தி.மு.க. ஆட்சி.

ஆளுங்கட்சி செய்ய மறந்ததை ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தி.மு.க. செய்து வருகிறது. “நம் மக்கள். நம் இனம்” என்ற உணர்வுடன் தமிழக மக்களுக்கான இந்தப் பணிகள் தொடர வேண்டும்.

ஐந்தாண்டு வேதனையின் தொடர்ச்சியாக ஓராண்டு கால சோதனை என்பதை அனுபவிக்கும் மக்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று இன்றைக்கு எரிமலை போல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். வேதனைகள் மிகுந்த இந்த ஆட்சி ஜனநாயக முறைப்படி வெகு விரைவில் மாறும். ஆறு ஆண்டுகளாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் சூரியக் கதிர்கள் வெளிச்சத்தை நிச்சயம் பரப்பும். எம் மக்களுடன் இணைந்து நின்று தி.மு.கழகம் எத்திசையிலும் வெல்லும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.