Apr 30

மீண்டும் வெளியாகும் நோக்கியா N8

நோக்கியா நிறுவனத்தின் பிரபல மொபைல் போன்களில் ஒன்றான நோக்கியா N8 புதிய அம்சங்களுடன் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் நேற்று அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா X6 அறிமுகமாகவில்லை. ஐபோன் X தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

நாட்ச் ரக டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் புகைப்படத்துடன் நோக்கியா இத்தகவலை அறிவித்திருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் நோக்கியா X6 என்ற பெயருக்கு பதில் நோக்கியா X என்று அழைக்கப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி புதிய ஸ்மார்ட்போனுடன் நோக்கியா N8-00 ஸ்மார்ட்போனினை மீண்டும் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

ஹெச்.எம்.டி. குளோபல் சார்பில் பதிவிடப்பட்டிருக்கும் இரண்டு வெய்போ போஸ்ட்களில் நோக்கியா X ஸ்மார்ட்போன் மே 16-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவிடப்பட்டிருக்கு்ம முதல் புகைப்படத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.முன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியா X ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஒன் சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்தது. 

இத்துடன் 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 1080x2280 பிக்சல், 19:9 ரக டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 அல்லது மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட், 4 ஜிபி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும். புகைப்படங்களை எடுக்க டூயல் 12 எம்பி கார்ல் செய்ஸ் லென்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதுதவிர ஹெச்எம்டி பதிவு செய்திருந்த டீசரில் நோக்கியா N சீரிஸ் அதிநவீன மாடல் வெளியாக இருப்பதை உணர்த்தியிருக்கிறது. நோக்கியா N சீரிஸ் மொபைல் போன் ஏப்ரல் 27, 2005-ம் ஆண்டு சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது. தற்சமயம் பதிவிடப்பட்டிருக்கும் டீசரின் படி புதிய மொபைல் ஏப்ரல் 27-ம் தேதி முதல் மே 2-ம் தேதிக்குள் மீண்டும் வெளியிடப்படலாம் என தெரிகிறது.