May 23

மன்செஸ்டரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில் தெரேசா மே கருத்து

மன்செஸ்டரில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல் என்பது நிரூபிக்கப்பட்டால் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூரமான தாக்குதல் இதுவாகவே இருக்கும் என பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 22ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அண்மைய தகவல்களின் படி 59க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்செஸ்டர் அரீனா விளையாட்டு மைதானத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணியளவில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற போது குறித்த மைதானத்தில் 21,000 பேர்  வரை கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தை நேரில் பார்வையுற்ற ஒருவர் கருத்து தெரிவித்த போது, “இந்த தாக்குதல் நடைபெற்ற போது, ஒரு நிமிடம் என்ன நடந்தது என்பதை அறியாது நாம் அதிர்ச்சியில் உறைந்தோம். அதன் பின்னர் எல்லா திசைகளில் இருந்தும் மக்கள் உயிர் பிழைக்கும் நோக்கில் பதறி ஓட ஆரம்பித்தனர். சிறுவர்கள் மற்றும் இளவயதினர் பலர் செய்வதறியாது திகைத்தனர். என்னால் அதை மறக்க முடியாது” என தெரிவித்தார்.