Apr 30

பிரெஞ்சு கலைக் களஞ்சியத்திலுள்ள ஓவியங்களில் பாதிக்கும் மேல் போலி: அதிர்ச்சி கண்டுபிடிப்பு

கட்டலேனிய ஓவியர் Etienne Terrusஇன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ஒரு கலைக் களஞ்சியத்திலுள்ள ஓவியங்களில் பாதிக்கும் மேல் போலி என கண்டறியப்பட்டுள்ளது பிரான்ஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் தெற்கிலுள்ள Elneஇல் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகம் கடந்த 20 ஆண்டுகளாக போலி ஓவியங்களுக்காக 160,000 யூரோக்கள் வரை வீணடித்திருப்பது தெரியவந்துள்ளதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கலை வரலாற்றியல் வல்லுநரான Eric Forcada இந்த சந்தேகத்தை எழுப்பும் வரையில் அருங்காட்சியகத்திலுள்ள ஊழியர்களுக்கு இந்த போலி ஓவியங்கள் குறித்து எதுவும் தெரியாமலே இருந்திருக்கிறது.

அவர் ஓவியங்களில் காணப்படும் கட்டிடங்களில் சில 1922ஆம் ஆண்டு ஓவியர் Terrus இறந்தபிறகு கட்டப்பட்டவை என்பதைக் கண்டறிந்துள்ளார்.இதையடுத்து நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று அருங்காட்சியகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள 140 ஓவியங்களில் 82 Terrus வரைந்தவை அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஒரு பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ள Elne மேயரான Yves Barniol, அருங்காட்சியகத்திற்கு வந்து Terrusஇன் ஓவியங்களை பார்த்ததாக எண்ணிச் சென்ற பார்வையாளர்களிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.