May 23

மன்செஸ்டர் தாக்குதலுக்கு அவுஸ்ரேலிய பிரதமர் கடும் கண்டனம்

இளவயதினரைக் குறிவைத்து பிரித்தானியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் வெறுக்கத்தக்க செயல் என அவுஸ்ரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் (Malcolm Turnbull) தெரிவித்துள்ளதோடு குறித்த தாக்குதலுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய தலைநகர் கேன்பராவில், இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் அவுஸ்ரேலியாவுக்கான பிரித்தானிய துணை உயர் ஆணையரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரபல பாடகி அரியானா கிராண்டேயின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் இதுவரை 22பேர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 59பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தீவிரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும் போதும் குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.