Apr 28

ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த சாம்சங்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லோ-என்ட் மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் ஆதிக்கம் அடிப்பட்டிருக்கும் நிலையில் சீன நிறுவனமான சியோமி ஸ்மார்ட்போன்கள் ஸ்டாக் தீரும் வரை விற்று தீர்ந்து விடுகின்றன. 

எனினும், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஆதிக்கம் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி நோட் 8 மற்றும் சமீபத்தில் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை முதலிடத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது.

2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் மட்டும் சுமார் 50% பங்குகளை பெற்றிருக்கிறது. கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் சாம்சங் நிறுவனம் 16% வருடாந்திர வளர்ச்சியுடன் சந்தையின் பாதி பங்குகளை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சாம்சங் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களான கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேலக்ஸி நோட் 8, கேலக்ஸி ஏ8 பிளஸ் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன.

சாம்சங்-ஐ தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் 25% பங்குகளுடன் இரண்டாவது இடத்திலும் ஆப்பிள் நிறுவனம் 20% பங்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் என மூன்று நிறுவனங்கள் மட்டும் இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் 95% பங்குகளை பெற்றிருக்கின்றன.

2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சாம்சங் நிறுவனம் 17.6% பங்குகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆப்பிள் 46.9% பங்குகளுடன் முதலிடத்திலும், ஒன்பிளஸ் 24.9% பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தன. அந்த வகையில் முந்தைய காலாண்டை விட சாம்சங் 32.4% வளர்ச்சியை பதிவு செய்து முதலிடம் பிடித்திருக்கிறது.சாம்சங் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக மார்ச் 16-ம் தேதி இந்தியாவில் வெளியான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் வாங்குவோருக்கு அறிமுக சலுகைகள் வழங்கப்படுகின்றன.

விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்ட ஐபோன் X மற்றும் ஐபோன்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவில் குறைந்ததை தொடர்ந்து ஆப்பிள் விற்பனை குறைந்தது. கூடுதலாக மேக் இன் இந்தியா மூலம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதும் ஆப்பிள் ஐபோன் விற்பனை குறைய காரணமாக இருக்கிறது.

சாம்சங் அதிரடி வளர்ச்சியையும் ஆப்பிள் சரிவை கண்டிருக்கும் நிலையில், ஒன்பிளஸ் வேகமாக வளரும் பிரான்டாக உருவெடுத்துள்ளது. பிரீமியம் பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் 192% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2017-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முதல் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.