Mar 12

முடிவுக்கு வருகிறது மீனவர் போராட்டம்: பிரிட்ஜோவின் உடல் நாளை அடக்கம்

இந்திய மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டம் திங்கட்கிழமை வாபஸ் பெறப்படுகிறது. நாளை திங்கட்கிழமை மாலை தங்கச்சிமடத்தில் பிரிட்ஜோவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

கச்சத்தீவு அருகே மார்ச் 6 திங்கட்கிழமை இரவு ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்தார். ஜெரோன் (27) என்ற மீனவர் காயங்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பிரிட்ஜோவின் உடலை மருத்துவமனை அதிகாரிகள் ஒப்படைக்க முயன்ற போது பெற்றோரும், உறவினரும் உடலை வாங்க மறுத்து செவ்வாய்கிழமை தங்கச்சிமடத்தில் மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் தொடர் தர்ணாப் போராட்டம் நடைபெற்றது.

மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையை கண்டித்தும் தங்கச்சிமடத்தில் மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தங்கச்சிமடத்தில் ஸ்டாலின், பன்னீர் செல்வம், திருநாவுக்கரசர், வைகோ, முத்தரசன், வாசன், ஜி.கே.மணி, திருமாவளவன், ஜவாஹிருல்லா, பாலபாரதி, வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.