Apr 26

மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும் – வேதனையில் கனடிய பிரதமர்

கனடாவில் பாதசாரிகள் மீது இரக்கமற்ற வகையில் மேற்கொள்ளப்பட்ட வேன் ஒன்றின் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) டொறண்டோவின் பரபரப்பான சாலைப்பகுதியில் வாடகை வான் ஒன்றில் வந்த ஒருவர் பாதசாரிகள் மீது வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். குறித்த சம்பவத்தில் பத்து பேர் வரையிலும் உயிரிழந்ததோடு, 16க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்தக் கோரச் சம்பவம் தொடர்பாக பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்திப்பதாக கூறியுள்ள பிரதமர், சம்பவத்தின் போது அஞ்சாமல் காயமடைந்தவர்களை காப்பாற்ற முன்வந்த அனைவருக்கும் நன்றிகள் எனவும் கூறியுள்ளார்.

இனிவரும் நாட்களில் படையினருடன் இணைந்து மக்களைக் காப்பாற்றவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தொடர்ந்தும் பாடுபடுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.