Mar 12

சர்வதேச நீதிபதிகள்: இறுதி முடிவை இலங்கை அரசே எடுக்கும் என்கிறார் மனோ

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் இலங்கை அரசினாலே மேற்கொள்ளப்படும் என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுத்தாலும்,இலங்கை அரசினாலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை  தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்படவிருக்கின்றது. அதில், போர்க் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.