Apr 24

பாரிஸ் தாக்குதல் சந்தேக நபருக்கு 20 ஆண்டு சிறை

2015 பாரிஸ் தாக்குதலின் உயிர் தப்பிய ஒரே சந்தேக நபரான சலாஹ் அப்தஸ்ஸலாமுக்கு தாம் கைது செய்யப்படும்போது பொலிஸாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அப்தஸ்ஸலாம் மற்றும் சக பிரதிவாதியான சொபியன் அயாரி இருவரும் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் காணப்பட்டுள்ளனர்.

24 வயது அயாரிக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸில் இவர்கள் இருந்த குடியிருப்பை பொலிஸார் 2016 ஆம் ஆண்டு சுற்றிவளைத்தபோது பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பிரசல்ஸ் நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துபோது இவர்கள் நீதிபதியின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததோடு விசாரணையில் பங்கேற்கவும் மறுத்தனர்.

பாரிஸ் தாக்குதலில் 130 பேர் வரை கொல்லப்பட்டதோடு இதன் மற்றொரு சந்தேக நபரான முஹமது பெல்கைத் பொலிஸ் சுற்றிவளைப்பின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பாரிஸ் தாக்குதல் தொடர்பில் 28 வயது அப்தஸ்ஸலாம் பிரான்ஸில் சிறை வைக்கப்பட்டிருப்பதோடு அவர் அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார்.