Apr 21

டக் ஃபோர்ட்டை டிரம்ப்புடன் இணைத்து பேசிய ஒன்ராறியோ முதல்வர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போலவே, தற்போதைய ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட்டும், எளியவர்களை இலக்குவைத்து, அவர்களுக்கு நெருக்கடிகளையும், துயரத்தையும் கொடுக்கும் ஒரு நபர் என ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் விமர்சித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தினை தவறாக கையாண்டமை தொடர்பில் சில லிபரல் கட்சியினர் சிறைத் தண்டனையை அனுபவிக்கக்கூடும் என டக் ஃபோர்ட் கூறியிருந்தமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

டக் போர்ட் முன் வைத்துவரும் கருத்துக்கள் டொனால்ட் டிரம்ப்பின் கருத்துக்களை ஒத்ததாகவே காணப்படுகின்றது. அவரின் பதிவுகளையே தற்போது டக் ஃபோர்ட் தனக்கு ஏற்றவாறு கையாண்டு வருகின்றார். தற்போது டக் ஃபோர்ட் வெளியிட்டுவரும் கருத்துக்கள், கிளாரி கிளிங்டனை குறிவைத்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்களைப் போன்றது.

ஆனால், கிளாரி கிளிங்டன் விட்ட அதே தவறுகளை நான் விடப்போவதில்லை. இவ்வாறான குணமுடையோருக்கு எதிராக நான் உரிய முறையில் பதிலளித்து போராடவுள்ளேன் என ஒன்ராறியோ முதல்வர் கதலின் வின் கூறினார்.