May 22

மோடியின் எடுபிடியாய், தமிழினப்படுகொலையை நினைவுகூரவும் தடை போட்டு, மூழ்கதனமாய் நடந்துகொண்ட எடப்பாடி அரசு!

வாக்களித்த மக்களுக்கே வில்லனாய் மாறிய இந்த பச்சைத் துரோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

“உண்ட வீட்டுக்கே இரண்டகமா?” இது தமிழர் அறநெறி. இரண்டகம் செய்வது குற்றத்திலும் குற்றம், பெரிய குற்றம் என்கிறது தமிழ் மரபு. அதிலும் உண்ட வீட்டுக்கே இரண்டகம் என்றால், அதனினும் கொடிய குற்றமே கிடையாது என்பதாகும்.

ஆனால் அப்பேர்ப்பட்ட குற்றத்தை மிகச் சாதாரணமாக, கிஞ்சிற்றும் மன உறுத்தலின்றி செய்து முடித்திருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

எந்த மக்கள் வாக்களித்து முதல்வர் நாற்காலியில் அவரால் உட்கார முடிந்ததோ, அந்த மக்களின் உணர்வினையே காலில் போட்டு மிதித்திருக்கிறார்.

ஆம். ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையை நினைவுகூரக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்.

2009ல் முள்ளிவாய்க்காலில் இந்திய-சிங்கள அரச பயங்கரவாதம் நிகழ்த்திய இனப்படுகொலை அது. ஒன்றரை லட்சம் தமிழர்களை காவு வாங்கியது. அவர்களின் நினைவேந்தலை தமிழன ஆர்வலர்கள் ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் நடத்தி வருகிறார்கள். ஆனால் எட்டாவது ஆண்டான இந்த ஆண்டில் மே 21 ஞாயிறன்று நடக்கவிருந்த அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று தடை போட்டுவிட்டார் எடப்பாடி.

மாலையில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்காகச் சென்றவர்களை அங்கு குவிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான காவல்படையினர்தான் வரவேற்றனர்.

ஏற்கனவே அந்தக் காவலர்கள் அங்கு கடற்கரையில் கருப்புச் சட்டை போட்டிருந்தவர்களையெல்லாம் சோதனை போட்டனர். அவர்களிடம் அடையாள அட்டை, முகவரிச் சான்று எல்லாம் கேட்டு கெடுபிடி செய்தனர்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இளைஞர்கள், இளைஞிகள் என்று பெருந்திரளாக வந்திருந்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் என் தலைமையில் “இனப்படுகொலை நினைவேந்தல் அமைதிப் பேரணி”யாகச் சென்று அதில் கலந்துகொண்டோம். மேலும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் கவுதமன் ஆகியோர் தலைமையில் வந்திருந்தார்கள்.

ஆனால் இங்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லை என்று காவலர்கள் தடுக்கவே, கூட்டத்தினர் பேரணியாய்ச் செல்லத் தலைப்பட்டனர். உடனே ஒட்டுமொத்த கூட்டத்தினரையும் காவலர்கள் கைது செய்யத் தொடங்கினர். அப்போது எல்லோரும் பலவந்தமாக காவல் வேனில் ஏற்றப்பட்டனர். குண்டுகட்டாகவும் தூக்கிப் போடப்பட்டனர்.

வேனில் ஏற்றப்பட்ட அவர்கள் மோடிக்கு எதிராகவும் எடப்பாடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

உண்மையும் அதுதானே! மோடியின் உத்தரவைத்தான் எடுபிடி எடப்பாடி நிறைவேற்றியிருக்கிறார்.

அண்மையில்தான் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிவிட்டுச் சென்றார். அதன்பின் மோடியும் பவுத்த சிங்களப் பண்டிகை கொண்டாட இலங்கைக்குச் சென்று புத்த பிக்குகளுடனும் சிங்கள ஆட்சியாளர்களுடனும் கலந்து பேசிவிட்டு வந்தார்.

இந்த நிகழ்வுகளின் தாக்கம் மே 17 மற்றும் 18 தேதிகளில் எதிரொலிக்கவே செய்தது. உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி எந்தத் தடையுமின்றி நடைபெற்றது. அந்த நாடுகள் அதை அங்கீகரித்தன.

ஆனால் தமிழினப்படுகொலையை இணைந்து நடத்திய இரு நாடுகளும்தான் (இந்தியா, இலங்கை) நினைவேந்தல் நடத்தவே தடை போட்டன. காரணம் இவை ஜனநாயகத்தை உச்சரிக்க மட்டுமே செய்யும் நாடுகள்! அதோடு சட்டத்தை ஏட்டளவில் மட்டுமே வைத்திருக்கும் நாடுகள்!

ஈழத்தில் ராணுவம் தடுத்தபோதும் அதனை எதிர்கொண்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது. இங்கு சென்னையிலும் தடையை மீறி நடத்தி கைது செய்யப்பட்டார்கள். ஆனால் கைது செய்யப்பட்ட அவர்கள் கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் போடப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தமிழினப்படுகொலை நினைவேந்தலை தடை செய்ய திட்டமிட்டே காய்நகர்த்தினார் மோடி. தன் நண்பர் நடிகர் ரஜினிகாந்தைச் சரிக்கட்டி மே 17, 18 தேதிகளில் அவரது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தச் செய்தார். அதைச் செய்ததன் மூலம் ஊடகங்கள் ஒரு வார காலத்திற்கு முழுக்க முழுக்க ரஜினியின் நிகழ்ச்சியையே ஒளிபரப்பின. இதனால் இனப்படுகொலை நினைவேந்தல் செய்தி ஊடகங்களில் இடம்பெறாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு விசுவாசம் காட்டுவதில் அதிமுகவினரிடையே கடும் போட்டியே நிலவியது. அந்தப் போட்டி இப்போது மோடிக்கு விசுவாசம் காட்டுவதில் திரும்பியிருக்கிறது. எனவே எடப்பாடியிடம் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தடை போடுமாறு சொல்ல வேண்டிய அவசியமேகூட இருக்கவில்லை. குறிப்பறிந்து தானாகவே அவர் தடை போட்டுவிட்டார்.

இனப்படுகொலை எனும்போது அது இலங்கையில் மட்டுமே நடந்துவிடவில்லை. இலங்கையில் தமிழினப்படுகொலை என்றால் இந்தியாவிலும் சீக்கியர் படுகொலை டெல்லியில், இஸ்லாமியர் படுகொலை குஜராத்தில் என்றெல்லாம் நடந்திருக்கின்றன. அந்த வகையில் இயல்பாகவே இரு நாடுகளும் ஒரே புள்ளியில் இணைகின்றன என்று சொல்லலாமா?

முன்பு இலங்கையின் மனித உரிமை மீறல்களை இந்தியா சுட்டிக்காட்டினால், “இந்தியாவில் மட்டும் என்ன வாழ்கிறதாம்; காஷ்மீரிலோ வடகிழக்குப் பகுதிகளிலோ நடப்பது என்ன” என்ற கேள்வி உடனடியாகவே இலங்கையிடமிருந்து பதிலாக வரும். ஆனால் இப்போது மோடி வந்த பிறகு அந்த மாதிரியான பேச்சுக்கே இடமில்லை; இரு நாடுகளும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதையே பார்க்க முடிகிறது.

எனவே இனப்படுகொலை குற்றவாளியான தன் உற்ற நண்பன் இலங்கையைப் பாதுகாக்க அனைத்தையும் செய்யத் துணிகிறது இந்திய மோடி அரசு. அதில் தமிழினத்தின் வாழ்வுரிமையே பலியாகிறதென்றாலும் அது ஒரு பொருட்டே அல்ல அவருக்கு!

இனப்படுகொலை நீதி விசாரணையில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கிடுக்கிப்பிடிகளிலிருந்து இலங்கையை விடுவித்து வருகிறது இந்தியா. இது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்காமல் செய்யும் பாதகச் செயல் என்பதை மோடி அரசு புரிந்துகொள்ளத் தயாரில்லை. இதனால் இனப்படுகொலை நீதி விசாரணையை முடக்குவதற்கும் அதைத் தாமதப்படுத்தி நீர்த்துப்போகச் செய்வதற்குமான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது இந்தியா. அதில் ஒன்றுதான் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் போடப்பட்ட தடை.

இந்தத் தடையை தமிழக அதிமுக அரசே போட்டிருப்பதுதான் துரோகத்தின் உச்சம். 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததே இந்தத் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழினமே ஒன்றுதிரண்டு அதிமுகவுக்கு வாக்களித்ததால்தான் என்றால் அதை இந்த எடப்பாடி பழனிச்சாமியால் மறுக்க முடியுமா? அந்த ஆட்சியதிகாரத்தை வைத்து 2014 மக்களவைத் தேர்தலில் 37 இடங்களைப் பெற முடிந்தது; தொடர்ந்து 2016லும் தமிழக ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது என்பதுதானே உண்மை.

இனப்படுகொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை வேண்டும் என்று துணிச்சலாகத் தீர்மானம் போட்ட அரசு, இப்போது எடப்பாடி முதல்வரானதும் “இறந்துபோன சொந்தங்களை நினைக்கவேகூடாது” என்று தடை போட்டு அடக்குமுறையை ஏவுகிறதென்றால், இது மோடிக்குச் செய்யும் எடுபிடி வேலையன்றி வேறென்ன?

இப்படி மோடியின் எடுபிடியாய், தமிழினப்படுகொலையை நினைவுகூரவும் தடை விதித்து, மூழ்கதனமாய்

நடந்துகொள்ளலாமா எடப்பாடி அரசு?

வாக்களித்த மக்களுக்கே வில்லனாய் மாறிய இந்த பச்சைத் துரோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.