May 22

ரஜினிக்கு சகாயம் ஆதரவா?

 நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் பதிவுகளுக்கு சகாயம் பதிலளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அரசியலில் நுழைந்தார். எந்த கட்சியில் நுழைவார்?, அல்லது புது கட்சி ஆரம்பிப்பாரா என பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதமே போய்கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில் ரஜினியை தங்கள் கட்சி வசம் இழுக்க பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் ரஜினிக்கு ஆதரவளித்துள்ளதாக பதிவுள் வைரலாக பரவி வந்தது. இது போன்ற பல்வேறு பதிவுகள் வருவதால் சமூகவலைதளத்தில் இந்த சர்ச்சை பதிவுகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்த சர்ச்சை பதிவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நெல்லையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் கூறுகையில் :'' தமிழ்ச் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருகிறேன். ரஜினிகாந்துக்கு நான் ஆதரவளிப்பதாக பரவும் தகவல்கள் உண்மையல்ல'' என அவர் கூறினார்.