Apr 16

மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!!

மாற்­றுத் தலைமை தொடர்­பாக அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு சிலர் கூறு­வ­தைக் கேட்­கின்­றோம். இவர்­கள் யாரை மன­தில் வைத்­துக்­கொண்டு கூறு­கி­றார்­கள் என்­ப­தும் எமக்கு நன்­றா­கத் தெரி­யும். ஓர் இனத்­தின் தலை­மையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இர­வில் உரு­வாக்­கி­விட முடி­யாது. அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­வது உண்­மை­யான தலை­மை­யும் அல்லை. அவ­ரி­டத்­தில் சிறந்த தலை­மைத்­து­வ­மும் இருக்­கப் போவ­தில்லை.

அந்­நி­ய­ரின் ஆட்­சி­யி­லேயேதனி­நாடு கேட்­டி­ருக்­க­லாம்

அந்­நி­ய­ரின் ஆட்­சி­யின் போது அவர்­க­ளுக்கு விசு­வா­ச­மாக இருந்­த­வர்­கள் தலை­வர்­கள் ஆக்­கப்­பட்­ட­னர். இத்­த­கை­ய­வர்­கள் தாம் சார்ந்த இனத்­தின் நன்­மை­க­ளை­விட தமது நலன்­கள் பற்­றியே அதி­க­மா­கச் சிந்­தித்­த­னர். அதற்கு ஏற்ற வகை­யில் செயற்­ப­ட­வும் செய்­த­னர். எமது அன்­றைய தலை­வர்­கள் தீர்க்க தரி­ச­னத்து­டன் செயற்­பட்­டி­ருந்­தால் இன்­றைய இக்­கட்­டான நிலை தமி­ழர்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்க மாட்­டாது.

இந்த நாட்­டில் இருந்து இறு­தி­யாக வெளி­யே­றிய ஆங்­கி­லே­யே­ரி­டம் தமி­ழர்­க­ளுக்­குத் தனி­யா­ன­தொரு நாட்­டைப் பிரித்து வழங்­க­மாறு கேட்­டி­ருந்­தால் அவர்­கள் அதை நிச்­ச­ய­மா­கச் செய்­தி­ருப்­பார்­கள். வெளி­யே­று­வ­தற்­குத் தயா­ராக இருந்த ஆள்­க­ளுக்கு இது­வொரு பெரிய காரி­ய­மாக இருந்­தி­ருக்க மாட்­டாது. ஆனால் எமது தலை­வர்­கள் பெரும் பான்­மை­யி­னரை விட்­டுப் பிரிந்து செல்வ­தற்­குத் தயா­ராக இருக்­க­வில்லை. அது­மட்­டு­மல்­லாது. தலை­ந­கர் கொழும்­பில் வசிப்­ப­தையே விரும்பி நின்­ற­னர். அவர்­க­ளின் சுய நல­மும், தீர்க்க தரி­ச­ன­மற்ற செயற்­பா­டு­க­ளும் தமி­ழர்­க­ளின் வாழ்­வையே சிதைத்து விட்­டன.

தமிழ்த் தலை­மை­க­ளுக்குநெருக்­கடி நிலை இன்று

தந்தை செல்வா, பிர­பா­க­ரன் போன்­ற­வர்­கள் தாம் சார்ந்த இனத்­துக்­கா­கத் தமது வாழ்க்­கையை அர்ப்­ப­ணித்­தார்­கள். அவர்­கள் கொண்­டி­ருந்த இலட்­சி­யம் நிறை­வே­றாது போனா­லும் மக்­க­ளால் இன்­ற­ள­வும் போற்­றிப் புக­ழப்­ப­டு­கின்­ற­னர். விடு­த­லைப் புலி­கள் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்­னர் தமி­ழர்­கள் நிர்க்­க­தி­யா­ன­ தொரு நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

கொடுத்­ததை வாங்­கிக்­கொண்டு வாயை மூடிக்­கொண்டு இருக்க வேண்­டி­ய­வர்­க­ளென்ற நிர்ப்­பந்­த­மொன்று இவர்­கள் மீது திணிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில் தலை­வர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளின் பணி­கள் கடி­ன­மாக மாறி­யுள்­ளன. பெரும் பான்­மை­யி­னத்­த­வர்­கள் இவர்­க­ளுக்­கு­ரிய அங்­கீ­கா­ரத்தை வழங்­கு­வ­தற்­குத் தயங்­கு­வ­தோடு உரிய மதிப்­பைக் கொடுப்­ப­தற்­கும் தவ­றி­வி­டு­கின்­ற­னர். தமிழ்த் தலை­வர்­கள் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக ஆட்­சி­யா­ளர்­க­ளி­டம் எடுத்­துக் கூறும்­போது அவை தட்­டிக்­க­ழிக்­க­ப­ப­டு­வ­தையே காண முடி­கின்­றது.

உசுப்­பேற்­றல்­கள் வேண்­டாம்

தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் சிலர் சில ஊட­கங்­க­ளின் துணை­யு­டன் தமது அர­சி­யல் பிழைப்பை நடத்தி வரு­கின்­ற­னர். ஊடக தர்­மத்தை மதிக்­காத சில தமிழ் ஊடகங்­கள் தமது விருப்­பத்துக்கு ஏற்­ற­வ­கை­யில் எழுந்­த­மா­ன­மா­கச் செய்­தி­களை வெளி­யிட்டு மக்­க­ளைக் குழப்­பு­வ­தையே தொழி­லா­கக் கொண்­டுள்­ளன. ஒரு பிரிவு மக்­கள் இதை நம்­பத்­தான் செய்­கின்­ற­னர்.

மகிந்த ராஜ­பக்ச தென் ப­குதி அர­சி­ய­லைக் குழப்பி வரு­வது போன்று சி.வி.விக்­னேஸ் வரன் வட­ப­கு­தி­யில் குழப்பி வரு­கின்­றார். உணர்ச்­சி­க­ர­மான வச­னங்­க­ளைப் பேசு­வ­தி­லும், மறை­மு­க­மான இன­வா­தக் கருத்­துக்­களை உதிர்ப்­ப­தி­லும் வல்­ல­வ­ரான இவர், இவற்­றைக் கொண்டே தமது அர­சி­யல் பய­ணத்­தைத் தொடர முடி­யு­மென நம்­பு­கின்­றார். மாகாண சபை­யில் அவ­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டுவரப்­பட்­ட­போது அவ­ருக்கு ஆத­ர­வா­கத் திரண்­ட­வர் களை விட தமிழ் அர­சுக் கட்­சிக்கு எதி­ரா­கத் திரண்­ட­வர்­களே அதிக மெனக்கூற முடி­யும். இதைக் கூட விக்­னேஸ்­வ­ர­னால் புரிந்து கொள்ள முடி­ய­வில்லை.

இத­னால்­தான் மக்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருப்­ப­தாக அவர் நம்­பு­கின்­றார். அடுத்த மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் தனிக்­கட்சி அமைத்தோ அல்­லது வேறு தரப்­பி­ன­ரு­டன் இணைந்தோ முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கத் தாம் போட்­டி­யி­டப் போவ­தா­கத் தெரி­விக்­கி­றார். முன்பு மாகா­ண­ச­பை­யில் விக்­னேஸ்­வ­ர­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ணம் கொண்­டு­வ­ரப்­பட்ட போதும் மாற்­றுத் தலைமை தொடர்­பா­கச் சிலர் கருத்து வெளி­யிட்­ட­னர். தற்­போது மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அவர் நிறுத்­தப்­ப­ட­ மாட்­டா­ரென அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் திரும்­ப­வும் அது எழுப்­பப்­பட்­டுள்­ளது.

சம்பந்­த­னைப் பிர­தி­யிடஇன்று எவ­ரும் இல்லை

தற்­போ­தைய நிலை­யில் சம்­பந்­த­னுக்கு இணை­யான தலை­வர்­களை எங்­கும் காண முடி­ய­ வில்லை. விக்­னேஸ்­வ­ர­னுக்­குக் கூட இந்­தத் த­குதி இல்­லை­யென்­று­தான் கூற வேண்­டும். அந்­தத் தகுதி அவ­ரி­டம் இருந்­தி­ருந்­தால் கடந்த தடவை நேர­டி­யா­கவே அவர் களத்­தில் இறங்­கி­யி­ருக்க முடி­யும் சம்­பந்­த­னின் தய­வில் கள­மி­றங்­கி­யி­ருக்­கத் தேவை­யில்லை.

கூட்­டமைப்­பின் ஆத­ர­வில் பத­வி­யில் அமர்ந்து, அதன் சுகத்­தை­யும் அனு­ப­வித்­து­விட்­டுத் தற்­போது வீறாப்­பா­கப் பேசு­வது ஏற்­கத் தக்­க­தல்ல. கூட்­ட­ மைப்­புக்கு எதி­ரான சதிகள் ஒன்று சேர்ந்து தமக்­குள் ஒரு தலை­மைத்­து­வத்தை ஏற்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும். அதற்­கான உரிமை அவர்­க­ளுக்­குப் பூர­ண­மாக உண்டு. மக்­கள் விரும்­பி­ னால் இதையே தமது தலை­மை­யாக ஏற்­றுக் கொள்­ள­வும் அவர்­க­ளால் முடி­யும்.

இதை விடுத்து தற்­போ­தைய தலை­மைத்­து­வத்தை அகற்­று­வ­தற்கு முயற்­சிப்­பதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. ஒரு சரி­யான தலை­மைத்­த­வத்தை அமைக்க முடி­யாத நிலை­யில் இருப்­ப­வர்­கள் மாற்­றுத் தலைமை தொடர்­பா­கப் பேசு­வ­தில் அர்த்­த­மே­யில்லை. இது தாமும் குழம்­பிக்­கொண்டு மக்­க­ளை­யும் குழப்பி விடு­கின்­ற­தொரு செய­லா­கவே கரு­தப்­ப­டும்.