Apr 16

கனடாவை கூப்பிடவில்லை என்கிறார் பிரதமர்

அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் சனிக்கிழமை சிரியா மீது வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், குறித்த தாக்குதல் திட்டம் தொடர்பில் கனடாவுக்கு நேரத்துடனேயே தெரியப்படுத்தப்பட்டதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

எனினும் கனடாவை அந்த தாக்குதல்களில் பங்குகொள்ளுமாறு கோரப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருவுக்கான மூன்றுநாள் பயணத்தின் முடிவில் தலைநகர் லீமாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்துள்ள பிரதமர் ரூடோ, தாம் இந்த தாக்குதலுக்கான பலத்த ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளதாகவும், எனினும் இந்த இராணுவ நடவடிக்கையில் பங்கேற்குமாறு தமக்கு வேண்டுகோள் விடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஒரு வாரத்தின் முன்னர் சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியா மீது நேற்றைய நாள் வான்வழித் தாக்குதலை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்கத்திய நாடுகள் சிரியா மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் தம்மை மேலும் வலிமையாக்கியிருப்பதாக, சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத் கூறியுள்ளார்.

அந்த வலிமையைக் கொண்டு, எதிரிகளைத் தம்மால் வீழ்த்தமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், குறித்த அந்தத் தாக்குதல் சம்பவங்கள், மேற்கத்திய நாடுகளின் நம்பகத்தன்மையை முற்றிலும் சீர்குலைத்துவிட்டதாகவும் விபரித்துள்ளார்.