Mar 11

அசர வைக்கும் சோப்பு சிற்பங்கள்

இத்தாலியைச் சேர்ந்த 26 வயது டேனியல் பார்ரெஸி உணவுப் பொருள் சிற்பக் கலைஞர். உலக சாம்பியன் பட்டங்களையும் பல்வேறு விருதுகளையும் பெற்றவர். இவரது சமீபத்திய சோப்பு சிற்பங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.

7 வயதிலிருந்தே உணவுப் பொருட்களில் சிற்பங்களைச் செதுக்க ஆரம்பித்துவிட்டார் டேனியல். சொந்தக் காரணங்களால் இவரால் பள்ளிக் கல்விக்கு மேலே படிப்பைத் தொடர முடியவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமையல் கலையில் ஆர்வம் வந்து, படிக்க ஆரம்பித்தார். அங்கே தன்னுடைய சிற்பக் கலையை எடுத்துக் காட்டும் வாய்ப்பு கிடைத்தது.

 அதிக மதிப்பெண்களுடன் வெளிவந்தபோது, அவருக்கு உணவுப் பொருள் சிற்பங்களின் மீது ஈடுபாடு அதிகரித்தது. அதையே தன் தொழிலாக எடுத்துக்கொண்டார். சர்வதேச அளவில் பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்து வருகிறார். உலகின் மிகச் சிறந்த உணவுப் பொருள் சிற்பக் கலைஞர்களில் முக்கியமானவர் டேனியல்.

தன்னுடைய திறமையைப் பல்வேறு பொருட்களில் செய்து பார்க்க நினைத்தார். சோப்பு சரியான தேர்வாக அமைந்தது. உணவுப் பொருட்களில் வடிக்கும் சிற்பங்கள் சில நாட்களுக்குத்தான் தாக்குப் பிடிக்கும். ஆனால் சோப்பு சிற்பங்களுக்கு அழகும் ஆயுளும் அதிகம். “நான் சிற்பம் வடிப்பது ஒரு மேஜிக் மாதிரிதான் தெரிகிறது.

கத்தியைத் தொட்டவுடன் மூளை கற்பனையை விரல்களுக்கு அனுப்பி வைக்கிறது. விரல்கள் சில மணி நேரங்களில் சோப்பை ஒரு சிற்பமாக மாற்றி விடுகின்றன” என்கிறார் டேனியல்.