May 22

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக முக்கிய ஆவணங்கள் உள்ளது: சி.பி.ஐ.,

முன்னாள் மத்திய அமைச்சர் மகன் காரத்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் இருப்பதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2007 ம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு கோடிக்கணக்கில் அந்நிய செலாவணியை பெற்று தந்ததாக புகார் அளிக்கப்பட்டு அந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பதவி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து கார்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து தெரிவிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் மறுத்துவிட்ட போதும், கார்த்திக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா கார்த்தியின் நிறுவனத்திற்கு பணம் தந்ததற்கான ரசீதுகளையும் இ-மெயில் பரிமாற்றங்களையும் சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கார்த்தி ரிட்டர்ன் டிக்கெட்டுடன் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் திரும்பியதும் விசாரணைக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.