May 22

கைவிரல்கள் அனைத்தையும் உறைபனித்தாக்கத்தில் இழந்தவருக்குக் கனடாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது

கானா நாட்டைச் சேர்ந்த சேய்து முகம்மது என்ற நபர் சென்ற வருட கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் இரவில் கனேடிய – அமெரிக்க எல்லையைக் கடந்து மனிட்டோபா மாகாணத்தில் உள்ள எல்லைக் காவல் நிலைக்கு அருகில் கனடாவிற்குள் சட்டவிரோதாமாகப் பிரவேசித்தார்.

 இந்தப் பயணத்தின் போது உறைபனித்தாக்கத்தினால்  கைவிரல்கள் அனைத்தையும்  சேய்து முகம்மது இழந்தார். 24 வயதான சேய்து முகம்மது 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று அங்கு அகதிக்கோரிக்கையை முன்வைத்தார்.

அது நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி கனேடிய – அமெரிக்க எல்லையை அடைந்து அங்கிருந்து மனிட்டோபா நோக்கி நடந்து சென்றார். ஆனால் பனிப்பொழிவு காரணமாக வழி தவறிய அவர், கனடாவிற்குள் நீண்ட தூரம் நடந்து சென்றிருந்தார்.

இவ்வாறு கனடாவிற்குள் 14 கி.மீ தூரம் நடந்து சென்றதன்பின்னர் அவர் பாரவூர்தி சாரதி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டார். பூச்சியத்திற்கு கீழே 30 பாகை செல்சியஸ் குளிரில் பல மணிநேரம் நடந்து சென்றதன் காரணமா அவர்து கைவிரல்கள் விறைந்து அகற்றப்படவேண்டிய நிலைக்கு உள்ளாகினார்.

 அவர் ஒரு இருபால் சேர்க்கையாளர் என்பதனால் தனது சொந்த நாடானா கானாவில் ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்ற காரணத்தால், கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அவரை அகதியாக அங்கீகரித்துள்ளது.