Apr 12

ஒன்ராறியோ சக்திவளத் திட்டங்கள் குறித்து விமர்சனம்

ஒன்ராறியோ சக்திவளத் திட்டங்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஒன்ராறியோவின் சுற்றுச் சூழல் ஆணையாளர் டையானா சாக்சீ, ஒன்ராறியோ லிபரல் அரசாங்கம் நீண்டகால சக்திவளத் திட்டங்களை முன்வைத்துள்ள நிலையில், அந்த திட்டம் அந்த அரசினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.

சுற்றுச் சூழலக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த மாநில அரசு இன்னமும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 13 ஆண்டுகளில் கரியமில வாயுவை வெளியேற்றும் எரிபொருள் பாவனையை ஒன்ராறியோ 40 இலிருந்து 50 சதவீதத்திற்கு குறைக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போதிலிருந்தே அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால் மாத்திரமே, 2030ஆம் ஆண்டுக்குள் குறித்த இலக்கினை எட்ட முடியும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சந்தப்பத்தில் ஒன்ராறியோ அரசாங்கம் முன்வைத்துள்ள நீண்டகால சக்கதிவளத் திட்டங்கள், குறித்த இந்த இலக்கை நிறைவேற்றுவதை பிரதிபலிக்கும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.