Apr 12

ஜஸ்டின் ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விரைவில் ஓய்வு?

பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டானியல் ஜீன் விரைவில் ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டானியல் ஜீனின் இந்த பதவி விலகல் கனேடியப் பிரதமரின் இந்தியப் பயணத்துடன் தொடர்புபடுத்தி அரசியல் வட்டாரங்களில் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

பிரதமரின் இந்தியப் பயண விடயமும் இவரது துரிதமான பணி ஓய்வு முடிவுக்கு காரணம் என்று உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் பதவி விலகலுக்கும் பிரதமரின் இநதியப் பயண விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அரசாங்கத் தரப்பு கூறுகின்றது.

பிரதமரின் இந்தியப் பயணத்திற்கு முன்னரே, தான் ஓய்வு பெறப் போவதான விருப்பத்தினை டானியல் ஜீன் வெளிப்படுத்தியுள்ளதாக ஒரு தரப்பு தகவல்கள் கூறுகின்றது.

அவ்வாறு அவர் ஓய்வுபெற திட்டமிட்ட காலப்பகுதிக்கு முன்னதாக, தற்போது உடனடியாக ஓய்வுபெற எத்தனிக்கின்றமை, குறித்த அந்த இந்தியப் பயண சர்ச்சையின் விளைவே என்று வேறு தரப்புகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை டானியல் ஜீனின் இந்த பணி ஓய்வு குறித்து கருத்து வெளியிடுவதற்கும், அவ்வாறு அவர் பணி ஓய்வு பெறவுள்ளார் என்ற தகவலை நிராகரிப்பதற்கும் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் பாதுகாப்பு ஆலோசகர் டானியல் ஜீனும் தனது இந்த பணி ஓய்வு குறித்த விவாகரம் தொடர்பில் ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவி வகித்து வரும் டானியல் ஜீன், அதற்கு முன்னர் இராஜதந்திரியாகவும், துணை வெளியுறவு அமைச்சருமாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.